ஜெயகாந்தனின் படைப்புகள் மகத்தானவை என்று நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் புகழாரம் சூட்டினார். தமிழ் எழுத்துலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கதைகள், கட்டுரைகள், நாவல் களை படைத்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் 80-வது பிறந்தநாள் விழா, சென்னை மியூசிக் அகாடமியில் வியாழக் கிழமை மாலை நடந்தது. இதில் ‘ஜெயகாந்தன் கதைகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
1960-70களில் ஆனந்த விகடன் பத்திரிகையில் ஜெயகாந்தன் எழுதி வெளியான கதைகளில் இருந்து 20 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அப்போது வெளியான அதே அ ச்சு வடிவில், அதே ஓவியங்களுடன் இந்நூல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அன்றைக்கு வரைந்த ஓவியர்கள் மாயா, கோகுல் ஆகியோரே இப்போதும் ஓவியங் களை வரைந்து கொடுத் துள்ளனர்.
இந்த நூலை விகடன் குழுமத்தின் தலைவர் எஸ். பாலசுப்ரமணியன் வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். இந்நூலினை தொகுத்த, ஜெயகாந்தனின் தீவிர ரசிகர்களான லண்டனில் வாழும் ராம் மற்றும் வனிதா தம்பதியினரே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவில் நல்லி குப்புசாமி பேசும்போது, ‘‘ஜெயகாந்தனை மற்றவர்கள் எழுத்தாளராக பார்க்கலாம். ஆனால், அவரை மகானாகவே நான் பார்க்கிறேன். எந்த விஷயமானாலும், அதிலுள்ள சாதகமானவற்றை அடிக்கோடிட்டு பார்ப்பவர் ஜெயகாந்தன். அவரது கதைகளை அது வெளியான காலத்தில் இருந்த அதே அச்சு வடிவத்தில் தந்திருப்பவது இளம் தலைமுறையினருக்கு கிடைத்த பரிசு’’ என்றார்.
நடிகர் சிவகுமார் பேசும்போது, “ஜெயகாந்தன் எழுதிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘சுயதரிசனம்’, ‘விழுதுகள்’, ‘பிரளயம்’ உள்ளிட்ட படைப்புகள் மகத்தானவை. அவருடைய சில படைப்புகளில் நாங்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது எங்கள் பாக்கியம்’’ என்றார்.
நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி, ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரும் ஆசிய வளர்ச்சி வங்கி முன்னாள் இயக்குநருமான கே.எஸ்.சுப்பிரமணியன், நீதிபதி கே.சந்துரு, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.