வண்டலூர்: பெருங்களத்தூரில் உள்ள, வண்டலூர் கிராமத்தின் கிராம தேவதையான இரணியம்மன் கோயில்கட்ட, தனியார் நிறுவனத்திடம் இடம்வாங்கி கொடுப்பதில் வருவாய்த் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால், ஜிஎஸ்டி சாலை விரிவாக்க பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பெருங்களத்தூரில் இரணியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில், வண்டலூர் கிராம மக்களின் கிராம தேவதையாக வணங்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து வட மற்றும், தென் மாவட்டங்கள் செல்லும் பொதுமக்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், பெருங்களத்தூர் பகுதியை கடந்து செல்லும் போது, இந்த கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு தங்கள் பயணத்தை தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சென்னை புறநகரில் வசிக்கும் மக்கள் மற்றும் ஜிஎஸ்டிசாலையில் பயணிப்போர் மத்தியில்பிரசித்தி பெற்றவர் இந்த இரணியம்மன். தற்போது ஜிஎஸ்டி சாலையில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக கோயில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக கோயிலின் பின்புறம் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்திடம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் கிராம மக்கள் சார்பில், கோயில் கட்ட நிலம் ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வருவாய்த் துறையும் இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து, தனியார் நிறுவனத்திடம் இடம் பெறும் முயற்சியில் இறங்கின. முதலில், 10.4 சென்ட் நிலம் ஒதுக்குவதாக தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஆனால்,தனியார் நிறுவனம் கொடுக்க முன்வந்த இடத்தில் வீராணம் குடிநீர் குழாய் செல்வதால், அங்கு கோயில் எழுப்ப இயலாது என கருதிய கிராம மக்கள், குடிநீர் குழாய்க்கு சேதம் ஏற்படாத வகையில் சற்று தள்ளி 15 சென்ட் நிலம்கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், தனியார் நிறுவனம் இந்த இடத்தை ஒதுக்க காலதாமதம் செய்து வருகிறது.
இது குறித்து வருவாய்த் துறையினர் பலமுறை அந்த நிறுவனத்தை அணுகியபோதும், அவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு முறையான பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஜிஎஸ்டி நெடுஞ்சாலை விரிவாக்க பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெருங்களத்தூரில் காலை, மாலை நேரங்களில் தினசரி கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இது குறித்து வண்டலூரை சேர்ந்த எ.கோபால் கூறும்போது, கோயிலால் சாலை விரிவாக்க பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது மனதுக்கு வேதனையாக உள்ளது. அலுவலக நேரம் மற்றும் விடுமுறை நாட்களில்,பெருங்களத்தூர் தொடங்கி, வண்டலூர் வரை வாகனங்கள் அணி வகுத்து நிற்பதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது என்றார்.
வண்டலூரை சேர்ந்த கவுன்சிலர்ரா.வெண்ணிலா கூறியதாவது: கோயில் கட்ட இடம் ஒதுக்குவதில் தனியார் நிறுவனம் தாமதப்படுத்துகிறது. அவர்களிடம் நிலத்தை பெறுவதில் இந்து அறநிலைத் துறையும், வருவாய்த் துறையும் மெத்தனம் காட்டுகின்றனர். அரசு நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதை அறிந்தும், அதிகாரிகள், தனியார் நிறுவனத்துக்கு சாதமாக செயல்படுவதாக தெரிகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினை குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை கேட்டபோது, "கோயிலுக்கு நிலம் கொடுப்பதாக தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால்இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை நேரில் அணுகியும், அவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அரசு தான் இதில் தலையிட வேண்டும்" என்றனர்.
வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: தனியார் நிறுவனத்திடம் கோயிலுக்காக, 15 சென்ட் நிலம் கேட்டு நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்களின் ஒப்புதலை பெற்று நிலம் தருவதாக, நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் நிறுவனத்தின் தலைமையிடம் மும்பையில் இருக்கிறது. 3 மாதத்துக்கு ஒருமுறை உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெறுமாம்.
அந்த கூட்டத்தில் தான் இடம் தேர்வு தொடர்பாக முடிவு செய்யப்படும் என, நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நிலம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் நிலம் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறோம். நாங்கள் தாமதம் காட்ட வில்லை. கண்டிப்பாக நிலம் பெற்று இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைத்து, கோயில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.