சென்னை: கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைவால் அதன் விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. டியூசிஎஸ் பண்ணை பசுமை கடைகளில் தொடர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு சந்தையில் கடந்தஒரு வாரமாக தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் வீடுகளில் தக்காளி பயன்பாடு குறைந்துள்ளது. ஓட்டல்களிலும் தக்காளி கொண்டு செய்யப்படும் உணவு வகைகளான தக்காளி சாதம், தக்காளி காரத்தொக்கு உள்ளிட்டவை தவிர்க்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு சந்தையில் கடந்த சில தினங்களாக மொத்த விலையில் கிலோ ரூ.70 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், நேற்று புதிய உச்சமாக ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. வெளிச் சந்தைகளில், தக்காளியின் தடிமனுக்கு ஏற்ப, சில்லறை விற்பனையில் கிலோ ரூ.40 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
சந்தையில் தக்காளி விலையேற்றம் இருந்தாலும், டியூசிஎஸ் பண்ணை பசுமை கடைகளில் தொடர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது. கொள்முதல் விலை உயரும்போது, ரூ.60-க்குமேல் எவ்வளவு இருந்தாலும், அத்தொகையை நிலைப்புத்தன்மை நிதியிலிருந்து அரசு ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளது என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலை உயர்ந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி மொத்த வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது: கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் 800 டன் தக்காளி வரும். ஆனால் நேற்று 300 டன் மட்டுமே வந்தது. சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.60 ஆக குறைந்தது.
அதன் பின்னர் வரத்து குறைவால் நேற்று கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. தக்காளிக்கு நிலையான விலை கிடைக்காததால், தக்காளி விலை குறையும்போது, பல விவசாயிகள் தக்காளி பயிரிடுவதை தவிர்த்து வருகின்றனர். அண்மையில் தக்காளி விலை குறைந்ததால், விவசாயிகள் தக்காளி பயிரிடுவதை கடந்த இரு மாதங்களாக தவிர்த்துவிட்டனர்.
சிலர் மட்டுமே பயிரிட்டுள்ளதால் உற்பத்தி குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது. தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில், தக்காளி வாங்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.