சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது ஒன்றரை வயது மகன் முகமது மகிருக்கு, தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைகாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதித்துள்ளனர்.
அங்கு, குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போட்டுள்ளனர். மேலும்,அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுத்தாகவும் கூறப்படுகிறது. ‘ட்ரீப்ஸ்’ போடப்பட்ட இடத்தில் கறுப்பாக மாறியுள்ளது. பின், வலதுகை முட்டி பகுதி வரை செயலிழந்ததுடன், கறுப்பாகவும் மாறியது. பரிசோதனை செய்த மருத்துவர்கள் வலதுகையை அகற்ற வேண்டும் என கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் தந்தை தஸ்தகீர் கூறும்போது, “குழந்தைக்கு ஒன்றரைஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளித்து வருகிறோம். ராஜீவ் காந்திமருத்துவமனையில், ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்ட பிறகு, கை கறுப்பாக மாறியது. மருத்துவர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
தொடர்ந்து கையின் நிலை மோசமானதால், மருத்துவர் ஒருவர், ‘ஆயின்மென்ட்’ எழுதிக் கொடுத்தார். அது,மருத்துவமனையில் இல்லை என்றதால் வெளியே இருந்து வாங்கி வந்து பயன்படுத்தியும் பயன் இல்லை. தற்போது கையை அகற்ற வேண்டும் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்’’ என்றார்.
‘‘குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததால், சில பிரச்சினைகள் இருந்துள்ளது. அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிலரின் கவனக்குறைவால் குழந்தைக்கு இந்நிலை ஏற்பட்டிருந்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் தெரிவித்தார்.