தமிழகம்

தருமபுரி | மருத்துவக் கழிவுகள் விவகாரம் - கிராம மக்கள் போராட்டத்தை அடுத்து உடனடி தீர்வு

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி அருகே விளைநிலத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய வாகனத்தை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்திய நிலையில், மருத்துவக் கழிவுகளை அகற்ற தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் சிவாடி கிராமம் அருகே விவசாய நிலத்தில் உள்ள பயன்பாடற்ற கிணறு ஒன்றில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சேகரிக்கப்படும் பயோ கழிவுகள், மருத்துவ உபகரணக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து கொட்டிச் செல்வதை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்றுமுன்தினம் (30-ம் தேதி) நள்ளிரவில் லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். பின்னர் போலீஸார் தலையிட்டு கழிவுகளை கொட்டாமல் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில் உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு ஏற்படுத்துமாறு உத்தரவிட்டார். எனவே, மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவக்குமார் தலைமையில் மருத்துவக் கல்லூரியில் இது தொடர்பாக நேற்று (1-ம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

தருமபுரி நகராட்சி அதிகாரிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மருத்துவமனை வளாகக் கழிவுகளை வெளியேற்ற ஒப்பந்தம் பெற்ற நிறுவன தரப்பினர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் கழிவுகளை தன்னிச்சையாக வெளியில் எந்த இடத்திலும் கொட்டக் கூடாது. சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக தரம் பிரித்து தருமபுரி நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். தினமும் பகல் 2 மணியளவில் நகராட்சி பணியாளர்கள் இந்த கழிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறையை உடனடியாக பின்பற்ற வேண்டும் என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT