ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் ஒதுங்கிய இரண்டு நாட்டுப்படகுகளை மரைன் போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நடுத்துரை கடல் பகுதியில் நேற்று (ஜூலை 1) காலை நாட்டுப்படகு ஒன்று கரை ஒதுங்கியது. தகவலறிந்த ராமேசுவரம் மரைன் போலீஸார் படகை கைப்பற்றி விசாரணை செய்தனர். இதுகுறித்து மரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ் கூறும்போது, "என்ஜின் இல்லாமல் கரை ஒதுங்கிய பைபர் படகு சேதமடைந்த நிலையில் உள்ளது.
இந்தப் படகு தூத்துக்குடி மாவட்டம் தெரேஸ்புரத்தைச் சேர்ந்த எடிசன் என்பவருக்கு சொந்தமானது. தூத்துக்குடி இனிகோநகர் கடற்ரையில் நங்கூரமிட்டு நிறுத்தியிருந்த இப்படகு காற்றில் கயிறு அறுந்து ராமேசுவரம் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து மீனவர் எடிசனை தொடர்பு கொண்டபோது, படகு சேதமடைந்த நிலையில் இருந்ததால், நங்கூரமிட்டு நிறுத்தியிருந்ததாகவும், காற்றில் கயிறு அறுந்து வந்திருக்கலாம் எனக்கூறினார்" என்றார்.
மேலும் ஏர்வாடி அருகே அடஞ்சேரி கடற்கரையில் நேற்று காலை ஒரு நாட்டுப்படகு கரை ஒதுங்கியது. இப்படகை கீழக்கரை மரைன் போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இப்படகும் தூத்துக்குடி மாவட்ட பதிவெண் கொண்டதாக உள்ளது. இப்படகு கடத்தலுக்கு ஏதும் பயன்படுத்தப்பட்டதா? அல்லது இரண்டு நாட்களாக வீசிய சூறாவளி காற்றில் தூத்துக்குடி கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தியிருந்த படகு கயிறு அறுந்து காற்றின் போக்கில் இங்கு கரை ஒதுங்கியதா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.