மதுரை: வசிக்கும் இடத்திலிருந்து சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரை சேர்ந்த ஸ்ரேயா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நான் காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். எனக்கு காட்டுநாயகர் சாதிச் சான்றிதழ் வழங்குமாறு உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் மனு அளித்தேன். என் மனுவை வருவாய் கோட்டாட்சியர் நிராகரித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு காட்டுநாயக்கர் சாதிச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: ஒருவர் நிரந்தர வசிப்பிடத்தில் இருந்து சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வேண்டும் என 1977-ம் ஆண்டு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. நிரந்தர வசிப்பிடம் என்பது அவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்கும் இடத்தை குறிக்கிறது. சொந்த ஊரை குறிப்பிடவில்லை.
இதனால், மனுதாரரின் பெற்றோர், தாத்தா ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பல ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் வசித்து வருவது தெரிகிறது. இதனால் மனுதாரர் சாதிச் சான்றிதழ் கோரி அளித்த மனுவை நிராகரித்து கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரருக்கு காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மனுதாரரின் விண்ணப்பத்தை மனுதாரர் பதிவு செய்த ஆவணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் பரிசீலித்து நான்கு வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
வருவாய் கோட்டாச்சியர் உரிய புரிதல் இல்லாமல் மனுதாரரை தேவையில்லாமல் நீதிமன்றத்துக்கு அழைத்து அலைகழித்துள்ளார். எனவே, வருவாய் கோட்டாட்சியர், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.