கோவை: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னை, திருநெல்வேலியில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு அடுத்தபடியாக, கோவையில்தான் அதிக மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
கோவையில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கென தனியே கட்டிடம் இல்லாததால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நுழைவுவாயில் அருகே உள்ள பழையகட்டிடத்தின் முதல்தளத்தில் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அங்கு வழக்குவிசாரணை நடத்தவும், அலுவலகம் செயல்படவும், கோப்புகள் வைக்கவும் என மொத்தம் 4 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவற்றில், 3 மிகக் குறுகிய அறைகள். இதனால், ஆணையத்துக்கென வாங்கப்பட்ட மேஜை, நாற்காலிகள், கோப்புகளை வைக்கும் அலமாரிகள் ஆகியவை நடைபாதையில் பயன்பாடின்றி குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆணையத்தின் அலுவலகம் அமைந்துள்ள அறையின் மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. தொடர்ச்சியாக நீர் இறங்கி அலுவலகத்தின் ஒருபக்க சுவர் பொரிந்து காணப்படுகிறது.
இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சிலர்கூறும்போது, “நுகர்வோர் குறைதீர்ஆணையத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் அறையும் குறுகலாகவே உள்ளது. வழக்குகள் அதிகம் உள்ள நாட்களில் வெளியில் நிற்க வேண்டியுள்ளது. அனைவரும் அமரக்கூட போதிய இடம் இல்லை. அங்கு கோப்புகள் வைக்கவும் இடம் இல்லை.
வழக்கறிஞர்கள், மனுதாரர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கென தனியே கழிப்பறைகள் இல்லை. குடிநீர் வசதியும் இல்லை. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்ஒதுக்கப்பட்டும், அதற்கான வசதி இல்லாததால் பொருத்தாமல் உள்ளனர்” என்றனர்.
இந்நிலையில்தான், நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு தனி கட்டிடம் கட்ட இடத்தை ஒதுக்கித் தருமாறு கோவை மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் 2022 மே 23-ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கென தனி கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அல்லது மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காலியாக உள்ளநிலத்தை ஒதுக்க வேண்டும்.
மத்திய அரசானது கட்டிடம் கட்ட நிதியை ஒதுக்குகிறது. அந்த நிதியை பெற வேண்டுமெனில், மாநில அரசு நிலத்தை இலவசமாக அளிக்க வேண்டும். இது தொடர்பாக மாநில அரசு அறிவுறுத்தியும், நிலத்தை இலவசமாக வழங்க நீங்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. எனவே, இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆட்சியருக்கே பதில் இல்லை: அதைத்தொடர்ந்து, 2023 மே 4-ம் தேதி கோவை வடக்கு, தெற்கு வருவாய் கோட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அனுப்பிய கடிதத்தில், “நுகர்வோர் குறைதீர் ஆணையம் அமைக்க தகுதியான அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்குமாறு உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை, புலத்தணிக்கை செய்து தகுதி வாய்ந்த அரசு புறம்போக்கு நிலங்கள் இருப்பின் அதன் விவரங்களை அனுப்பி வைக்குமாறு 2022 ஜூன் 28, செப்டம்பர் 29, 2023 மார்ச் 30-ம் தேதிகளில் கடிதம் மூலம் கோரப்பட்டு, தற்போதுவரை அறிக்கை வரப்பெறவில்லை. இந்நிலையில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அமைக்க 10 முதல் 15 சென்ட் காலி இடத்தை தேர்வு செய்து வழங்குமாறு ஆணையத்தின் தலைவர் கோரியுள்ளார்.
எனவே, தகுதிவாய்ந்த அரசு புறம்போக்கு நிலங்கள் ஏதேனும் இருப்பின் அதன் விவரத்தை காலதாமதம் தவிர்த்து விரைவில் அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நகல்கள், கோவை வடக்கு, தெற்குவட்டாட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக கோவை வடக்கு கோட்டாட்சியர் பி.கே.கோவிந்தன் கூறும்போது,“மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு தனி கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிலம்ஒதுக்கக்கோரி வரப்பெற்ற கடிதம் அடிப்படையில், உடனடியாக நிலத்தை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.