திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவின் குவாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு குறித்து, ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தொலைபேசியில் ஒருவருடன் பேசிய ஆடியோ ஒன்று அண்மையில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் அரசியல் திரை பகுதியில் நேற்று ‘நேருக்கு நேரு... தாறுமாறு... குவாரியால் வெடிக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ’ என்ற தலைப்பில் செய்திக் கட்டுரை வெளியானது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியது: கட்சியினரையும், என்னை சுற்றி இருப்பவர்களையும் வளர்த்து விட்டு தான் எனக்கு பழக்கமே தவிர, யாரையும் அழிக்க நினைத்ததில்லை. எம்.எல்.ஏ பழனியாண்டியின் குவாரியில் தவறு நடந்திருப்பது தெரியவந்ததால் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஸ்ரீரங்கம் தொகுதியில் அவர் போட்டியிட தலைமையிடம் பேசிநான் தான் சீட் வாங்கிக் கொடுத்து,பிரச்சாரம் செய்து, வெற்றி பெறவைத்து, இவ்வளவு பெரிய பதவியும், அந்தஸ்தும் உருவாக்கிக் கொடுத்துள்ளேன். அவரை வளர்த்து விட்ட நானே எப்படி அழிக்க நினைப்பேன். அவர் தவறு செய்யாவிட்டால் அதிகாரிகளை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்? அதை அவர் தைரியமாக எதிர்கொள்ள வேண்டியது தானே?. இவ்வாறு அவர் கூறினார்.