அமைச்சர் தா.மோ.அன்பரசன் | கோப்புப் படம் 
தமிழகம்

மறுகட்டுமான திட்டத்தின் கீழ் சென்னையில் முதல்கட்டமாக 7,175 புதிய குடியிருப்புகள்: அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ராமகாமத்துபுரம் மற்றும் எம்.கே.ராதா நகர் ஆகிய திட்டப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:ராமகாமத்துபுரம் திட்டப் பகுதியில்426 வீடுகளும், எம்.கே.ராதா நகர்பகுதியில் 700 வீடுகளும் உள்ளன. இக்குடியிருப்புகள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், இவற்றை மறுக்கட்டுமானம் செய்து புதிய குடியிருப்புகளாக கட்டித்தர இப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விரைவில் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, மறுகட்டுமான திட்டத்தின்கீழ் சென்னையில் 10 திட்டப் பகுதிகளில் உள்ள 3,934 பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டுள்ளன. மேலும் 11 திட்டப்பகுதியில் 2,258 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் 19 திட்டப் பகுதிகளில் 6,805 குடியிருப்புகள் இடிக்கும் பணி விரையில் தொடங்கப்படும்.

அதைத் தொடர்ந்து முதல்கட்டமாக 20 திட்டப் பகுதிகளில்7,175 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஓரிருமாதங்களில் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், நா.எழிலன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT