பழநி காரமடை பகுதியில் உள்ள விளைநிலத்தில் கிடந்த மதுபாட்டில்கள். 
தமிழகம்

திறந்தவெளி பாராக மாறும் விளைநிலங்கள்: பழநி விவசாயிகள் வேதனை

செய்திப்பிரிவு

பழநி: பழநியில் விளைநிலங்களை திறந்தவெளி பாராக சிலர் மாற்றி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பழநி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. இத்தொழிலை நம்பி ஆயிரக் கணக்கான விவசாயிகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழநியில் அனுமதியின்றி இயங்கிய மதுபான பார்கள் மூடப்பட்டன.

இதையடுத்து டாஸ்மாக் கடைசியில் மது வாங்குவோர், விளை நிலங்களில் அத்துமீறி நுழைந்து திறந்தவெளியில் அமர்ந்து மது குடிக்கின்றனர். காலியான மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவு பொட்டலங்களை விளை நிலங்களில் வீசி விட்டுச் செல்கின்றனர். சிலர் மதுபாட்டிலை உடைத்து விட்டுச் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மட்டுமின்றி மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளும் பாதிக்கப்பகின்றன.

இது குறித்து பழநியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது: மது அருந்திவிட்டு பாட்டில்களை விளைநிலத்திலும், கால்வாயிலும் வீசி செல்கின்றனர். பிளாஸ்டிக் டம்ளர், பாலிதீன் பைகள் விளைநிலங்களில் படிவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. சிதறிக் கிடக்கும் உடைந்த பாட்டில்கள் விவசாயிகள், கால்நடைகளின் கால்களை பதம் பார்க்கின்றன. விளைநிலங்களில் மது அருந்துவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

SCROLL FOR NEXT