காரைக்குடியில் உள்ள பாஜக துணைத் தலைவர் எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து செவ்வாய்க்கிழமை மர்மநபர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9-வது வீதியில் எச்.ராஜா வீடு உள்ளது. இவர் பாஜக மாநில துணைத் தலைவராக உள்ளார். மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தார்.
இவருக்கு, ஏற்கெனவே கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த சம்பவமும், இவரது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவமும் நடந்துள்ளதால், வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவருக் கென தனியாக போலீஸ் ஒருவரும் பாதுகாப்புக்கு உடன் செல்கிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவரது வீட்டுக்கு அஞ்சலில் தபால் வந்துள்ளது. அனுப்புநர் முகவரியின்றி வந்த அந்த கடிதத்தில், கொலை மிரட்டல் தொடர்பான வாசகங்கள் இருந்தன.
இதுபற்றி எச்.ராஜா கூறும்போது, எனக்கும் என் வீட்டுக்கும் பாதுகாப்பு உள்ளது. அஞ்சலில் வந்த மிரட்டல் கடிதத்தின் நகலை எஸ்.பி.யிடம் கொடுத்துள்ளேன் என்றார்.
இதுபற்றி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் கூறும்போது, கொலை மிரட்டல் கடிதம் தபாலில் வந்ததால், யார் அனுப்பினார்கள் என கண்டுபிடிப்பது சிரமம். அவரது வீட்டுக்கு ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் குழப்பமான வாசகங்கள் உள்ளன. இருப்பினும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்றார்.
எச்.ராஜாவுக்கு வந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக, காரைக்குடி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனசேகரன் புதன்கிழமை வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.