சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை சரியானதா, இல்லையா என்பது குறித்து உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இதுபோல தன்னிச்சையாக செயல்பட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அமைச்சரவையில் ஏதாவது புதிதாக மாற்றம் செய்யவும், ஓர் அமைச்சரை நீக்கவும், புதிதாக ஒருவரை அமைச்சராக்கவும், அமைச்சரவையின் தலைவராக உள்ள முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமே தவிர, அவரது இஷ்டம்போல யாரையும் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கவோ, அமைச்சரவையில் இருந்து நீக்கவோ அரசியலமைப்பு சட்ட ரீதியாக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. செந்தில் பாலாஜி நீக்கத்தில் அவர் சட்டத்துக்கு புறம்பாக, வரம்பு மீறி செயல்பட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவு முதல்வரையோ, தமிழக அரசையோ எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.
மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன்: முதல்வர் பரிந்துரைக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ஆளுநர் செவிசாய்க்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சராக முடியும். ஒருவரை அமைச்சராக்க அதிகாரம் படைத்த ஆளுநரால், குறிப்பிட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியில் இருந்து ஒருவரை நீக்கவும் தனிப்பட்ட அதிகாரம் உண்டு. இதை அரசியலமைப்பு சட்டரீதியாக மறுக்க முடியாது.
குற்ற வழக்குகளில் சிக்கி கைதாகியுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதை ஏற்க முடியாது என ஆளுநர் மறுப்பு தெரிவித்த அடுத்த கணமே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நீக்கியிருக்க வேண்டும். ஆனால், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் அரசாணை பிறப்பித்தார். அமைச்சர் என்ற பதவியில் நீடித்துக்கொண்டு அவர் எப்படி தனக்கு எதிரான குற்ற வழக்கை நேர்மையாக எதிர்கொள்வார்.
அரசியலமைப்பு சட்டரீதியாக ஓர் அமைச்சர் எடுத்துக் கொள்ளும் ரகசிய காப்பு பிரமாணம் மிக முக்கியமானது. அதை நிலைநாட்ட ஆளுநர் எந்த முடிவையும் சட்டரீதியாக எடுக்க முடியும். ஒரு மாநிலத்தில் ஆட்சி சட்டத்துக்கு புறம்பாக எல்லை மீறி செல்கிறது என்றால், அந்த ஆட்சியை கவிழ்க்கவும் ஆளுநருக்கு பிரத்யேக அதிகாரம் உண்டு.
ஆளுநர் சொல்வது என்ன? - முன்னதாக, செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களை 2 அமைச்சர்களிடம் பிரித்து அளித்திருப்பது குறித்து அரசு நிர்வாகஉத்தரவு பிறப்பித்தது. அதில், ‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார்’ என்றும் அறிவித்தது.
இந்த சூழலில், ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று இரவு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றது மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குஉள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் செந்தில் பாலாஜி குற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார். அவர் அமைச்சர் பதவியை முறைகேடாக பயன்படுத்தி, விசாரணையில் தலையிடுவதுடன், சட்ட நடவடிக்கைகளை தடை செய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது அவர் அமலாக்கத் துறையின் குற்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவர் மீதான பல ஊழல் மற்றும் குற்ற வழக்குகளை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் அமைச்சராக தொடர்வது, நேர்மையான விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாநில செயல்பாடுகளுக்கும் இடையூறை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டு, அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக நீக்கியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டரீதியாக சந்திப்போம் - முதல்வர் ஸ்டாலின் உறுதி: சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநரின் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்’’ என்றார்.
இந்நிலையில், ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.