தமிழகம்

ஜூலை 3-வது வாரத்தில் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி வைக்க அமித் ஷா தமிழகம் வருகை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற உள்ள பாத யாத்திரையைத் தொடங்கிவைப்பதற்காக ஜூலை 3-வது வாரத்தில் அமித் ஷா தமிழகம் வர உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு தமிழகம் திரும்பிய அண்ணாமலைக்கு, சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

பிரதமருக்கு பாராட்டு பத்திரம்: பாஜக சார்பில் லண்டன் சென்று, பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து பேசினேன். அதேபோல, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், இலங்கைக்கு இந்தியாவின் உதவி, இந்தியாவின் எதிர்பார்ப்பு, அடுத்த 10 ஆண்டுகள் இலங்கையின் வடகிழக்கு பகுதியின் பார்வை உள்ளிட்டவைகள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டேன். இங்கிலாந்தில் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சியை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

லண்டனில் இருக்கும் கோயில்கள் அனைத்தும் சைவ கோயில்கள். அங்கு சில கோயில்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. லண்டனில் உள்ள அனைத்து கோயில்கள் கூட்டமைப்பின் அறங்காவலர்கள், பிரதமர் மோடிக்கு பாராட்டுப் பத்திரம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது, சைவ ஆதீனங்களுக்கு பிரதமர் கொடுத்த மரியாதை, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சி இவை மூன்றையும் பிரதமர் கையில் எடுத்திருக்கிறார் என்று பாராட்டுகின்றனர். இங்கி லாந்தில் உள்ள இந்தியவர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள்.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் இருக்கக் கூடாது என்பதே உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு. 70 ஆண்டுகளாக அந்த தீர்ப்பு நடைமுறையில் உள்ளது. சிதம்பரம் கோயில் விவகாரத்தில், தமிழக அரசு முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

அறநிலையத் துறை அதிகாரிகள் சிதம்பரம் கோயிலுக்குள் செல்லலாம் என்று குறிப்பிட்ட வரையறையுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஏராளமான பிரச்சினைகள்உள்ளன. அவற்றை சரி செய்யாமல், சிதம்பரம் கோயில் தீட்சிதர்களை முன்வைத்து தினமும் புதுப்புது பிரச்சினைகளை உருவாக்குவதே திமுக அரசு வேலையாகக் கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற உள்ள பாத யாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தருவதாகக் கூறியுள்ளார். அதேநேரத்தில், ஜூலை 2-வது வாரத்தில் கட்சி சார்பில் மீண்டும் 4 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் உள்ளது. அதை முடித்துவிட்டு ஜூலை 3-வது வாரத்தில் எனது பாத யாத்திரை தொடங்கும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

SCROLL FOR NEXT