தமிழகம்

காகித குடுவைகளில் மதுபானம் விற்பனை - அமைச்சர் முத்துசாமி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் ‘90 மிலி’ காகிதக் குடுவைகளில் (டெட்ரா பாக்கெட்) மதுபானங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், போலி மதுபானம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனையாகும் தொகையை, இரவு நேரங்களில் ஊழியர்கள் எடுத்துச் செல்கின்றனர். அந்த நேரத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க வங்கி அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். வங்கி அதிகாரிகள் நேரடியாக கடைக்குச் சென்று பணத்தைப் பெறும் வகையிலோ, வாகனங்கள் மூலம் ஒவ்வொரு கடையாக சேகரிக்கும் வகையிலோ நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

தற்போது கர்நாடகாவில் உள்ளதுபோல, கண்ணாடி பாட்டில்களுக்குப் பதில் காகிதக் குடுவையில் மதுபானங்களை அடைத்து விற்பனைசெய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஒரு பாட்டிலை இருவர்பிரிக்கும்போது, அதில் விஷம் கலப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. இதைத் தவிர்க்க, 90 மி.லி. என்ற அளவில் காகிதக் குடுவையில் மதுபானத்தை அடைத்து விற்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT