தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடந்த ஆசிய யோகா போட்டியில் 2 தங்கம் வென்ற காமாட்சி. (அடுத்த படம்) வெண்கலம் வென்ற வில்வமுத்தீஸ்வரி. 
தமிழகம்

ஆசிய யோகா போட்டியில் ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பெண்கள் 2 தங்கம், 2 வெண்கலம் வென்று சாதனை

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ஆசியன் யோகாசன ஸ்போர்ட்ஸ் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் ஜூன் 24 முதல் 26-ம் தேதி வரை நடந்தது. ஆசிய அளவிலான போட்டியில் இந்தியா, சீனா, தாய்லாந்து, ஈரான், ஹாங்காங், வியட்நாம் உள்ளிட்ட 30 நாடுகளிலிருந்து 125 யோகா போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொசுக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி, இந்தியா சார்பில் பங்கேற்றார். இவர் 24 முதல் 28 வயதுக்கு உட்பட்ட பாரம்பரிய யோகா சுற்று மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான குழு யோகா சுற்று ஆகிய 2 போட்டிகளில் முதலிடம் பிடித்து 2 தங்கப் பதக்கங்களை வென்றார். யோகா ஆர்ட்டிஸ்டிக் ஃபேர் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். காமாட்சியை பொசுக்குடிப்பட்டி கிராம மக்கள் பாராட்டினர்.

மேலும் 14 முதல்18 வயதுக்கு உட்பட்டோருக்கான யோகா போட்டியில் கடலாடி மலட்டாறு வி.வி.எஸ்.எம் மெட்ரிக் பள்ளியின் பிளஸ் 2 மாணவி வில்வ முத்தீஸ்வரி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

மாணவிக்கு பள்ளியின் தாளாளர் சத்தியமூர்த்தி, முதல்வர் அங்காளஈஸ்வரி மற்றும் எம்.கரிசல்குளம் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT