கோவை: பொது சிவில் சட்டம் என்பது காலத்தின் தேவை என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
கோவை ஒக்கிலியர் காலனி பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
இதனை தொடங்கி வைத்த பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமண விழாவில் முதல்வர், எதிர்க்கட்சிகளை வசைபாடுவது, சாபம் கொடுப்பதுதான் திராவிட மாடலா. இது அநாகரிகம். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி பேசியது 100 சதவீதம் உண்மை. அவர் பொய் பேசவில்லை.
குடும்ப ஆட்சி நடக்கவில்லை என சொல்லுங்கள். வாரிசு என்ற காரணத்திற்காக பதவி கொடுக்கவில்லை என்று சொல்லுங்கள். முதல்வரின் மகன் என்பதால் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கின்றனர். பாஜகவை குறை கூற முதல்வருக்கு அருகதை இல்லை. சட்டம் என்பது நாட்டில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
மதத்திற்கு ஒரு சட்டம் இருப்பதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பொது சிவில் சட்டம் என்பது காலத்தின் தேவை. முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு நியாயம், நீதியை கொடுத்தது. சுயநல அரசியலுக்காக பெண்கள் வாய்ப்பை பறிக்கக் கூடாது. பெரியார் மண் என்று சொல்லும் இந்த மண்ணில், சாதி குறித்து மக்கள் மனதில் ஏன் மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை.
சட்டம் மட்டுமே தீர்வு அல்ல. திமுக அமைச்சர்களே பட்டியல் இன மக்களை இழிவாக பேசுகின்றனர். திமுக பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் இயக்கமாக உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில் இந்து மக்களின் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாரா? பிரதமர் மோடி எல்லா மதத்தையும் சமமாக பார்க்கிறார்.