தமிழகம்

கர்நாடக அரசு தண்ணீரை விடத் தவறினால் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக அரசு காவிரி நீரை திறக்கத் தவறினால் டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ்.மாசிலாமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: மேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறந்து குறுவை சாகுபடி பரப்பளவை 5 லட்சமாக உயர்த்திமகசூலை அதிகரிக்கத் தமிழகஅரசு திட்டமிட்டதை வரவேற்கிறோம். ஆனால் கடந்த 15 நாட்களாகத் திறந்துவிடப்பட்ட தண்ணீர் விதைக்க மற்றும் நடவு செய்யப் பயன்படவில்லை.

இந்த குறைந்த நீரும், வெயில் கடுமை மற்றும் பாசன நிலைகளில் நடந்த கட்டுமானங்களால் பல இடங்களில் பயனில்லாமல் போனது. இந்த கட்டுமானங்களை உடனடியாக முடிக்க வேண்டும். கடந்த 25-ம் தேதிமுதல் மேட்டூர் அணையிலிருந்து 13,000 கன அடி தண்ணீரைத் திறந்தது ஆறுதல் அளிக்கக் கூடியது ஆகும்.

மேட்டூர் அணை நீர் இருப்பு தற்போது உரிய அளவுக்கு இல்லை என்றாலும், நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி நீரை 30 நாட்களுக்குக் கட்டாயம் திறக்க வேண்டும். காவிரி மற்றும் வெண்ணாறு ஒவ்வொன்றுக்கும் 10,000 கன அடி கொடுக்க வேண்டும். இந்த தண்ணீர் 7 முதல் 10நாட்கள் இடைவெளியில் காவிரிமற்றும் வெண்ணாற்றில் சுழல்முறை பாசனமாக மேற்கொள்ள வேண்டும்.

உள்முறை பாசனம் கூடாது. ஒரு மாதத்துக்கு மட்டுமாவது இந்த அளவு தண்ணீர் வேண்டும். மேலும் கரைக் காவலர்களை கூடுதல்படுத்தி, கடை நிலைஆறுகள் மட்டுமல்ல வாய்க்கால்கள் வரை தண்ணீர் செல்வதைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய நீரைப் பெற்றால்தான் தொடர்ந்து பாசனத்துக்குரிய அளவு நீர் நமக்குக் கிடைக்கும்.

எனவே, தீர்ப்பின்படி ஜூன் மாதம்9.1 டிஎம்சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி மற்றும் கூடுதல் 40.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசிடம் இணக்கமாகவோ அல்லது காவேரி ஆணையம் மூலமாகவோ பெற அவசர நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். வழக்கம் போல் வெள்ள நீரைத் திறந்து விட்டு, தீர்ப்பை அமல்படுத்தி விட்டதாகக் கர்நாடகம் கூறுவதை தற்போதைய நிலையில் ஏற்கவே முடியாது.

நீரைத் திறக்கத் தவறினால் குறுவை விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக கர்நாடக அரசை எதிர்த்து, தீர்ப்பின் படி தண்ணீர் கேட்டு டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டத்தை நடத்தும். அதே நேரம், விவசாயிகள் சாகுபடி பணிகளைத் தொடர குறுவை நெல் பயிருக்கான காப்பீடு திட்டத்தைத் தனியார் மூலமோ அல்லது தமிழக அரசோ ஏற்று உடனடியாக அறிவித்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT