சென்னை: அனைத்து குவாரிகளுக்கும் 30 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி, குவாரி அனுமதி வழங்க வேண்டும். கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் அமைச்சர்கள் பேசி, அவர்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த சில நாட்களாக, சுற்றுச்சூழல், கனிம வளத் துறை அதிகாரிகள் கல்குவாரிகளை பார்வையிட்டு, பல்வேறு புகார்களை கூறி,தேவையற்ற முறையில் குவாரிகளை முடக்கி நசுக்க நினைக்கின்றனர் என்று குற்றம்சாட்டி, கல்குவாரி உரிமையாளர்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு, கட்டுமான தொழில் முழுமையாக நின்றுவிட்டது.
தமிழகம் முழுவதும் குவாரி தொழிலை நம்பியுள்ள லாரி தொழில், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும், வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டும் ஏழை, எளிய, நடுத்தர மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு தீர்வுகாண, அனைத்துகுவாரிகளுக்கும் 30 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், குவாரி அனுமதியும் வழங்க வேண்டும். அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை தயாரிக்கும் குடிசைத் தொழில்களுக்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களே வழங்க சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும்.
குவாரி உரிமம் புதுப்பிக்க அதிகஅளவில் தாமதம் ஆகிறது. தாமதமின்றி விரைவாக குவாரிகள் புதுப்பிக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிரான்சிட் பாஸ், ஸ்டாக் யார்டு நடைமுறையை நீக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களை ஏலம் விடும்போது, தற்போதுள்ள நடைமுறைப்படி குவாரிக்கு உண்டான சுற்றுச்சூழல் அனுமதி, வரைபட பிளான் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் கல் குவாரி உரிமையாளர்கள் வைத்துள்ளனர். கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் கனிம வளத் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் பேசி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.