சென்னை: எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் ரூ.5.89 கோடியில் காத்திருப்பு அறை, உணவுக்கூடம் கட்டுவதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ரூ.5.89 கோடியில் காத்திருப்பு அறை மற்றும் உணவுக்கூடம் கட்டிடத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் இரா.சாந்திமலர், சென்னை ராஜீவ்காந்தி அரசுபொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ரெமா சந்திரமோகன், அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் க.கலைவாணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். குழந்தைகளை மருத்துவமனைகளில் சேர்த்துவிட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்குமிடம், உணவு வசதிகளின்றி அவதிப்படும் நிலை உள்ளது.
இதற்கிடையே, முதல்வரின் வழிகாட்டுதலின்படி 2022-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் 43,231 பேர் பங்கேற்றனர். அவர்கள் பதிவுக் கட்டணமாக தலா ரூ.300 செலுத்தியிருந்தார்கள். பதிவு கட்டணத்தில் சேவைவரி போக ரூ.1 கோடியே 22 லட்சத்து 2,450-ஐ பரிசளிப்பின்போது மேடையிலேயே முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நமக்கு நாமே திட்டம்: அப்போது, எழும்பூர் மருத்துவமனையில் காத்திருப்பு அறை, உணவு வழங்கும் அறை போன்றபல்வேறு வசதிகளை இந்த தொகையைக் கொண்டு `நமக்கு நாமே' என்ற திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யலாம் என்று முதல்வர் தெரிவித்தார்.
அதன்படி ரூ.1 கோடியே 22 லட்சத்து 2,450 மற்றும் அரசின் பங்குத் தொகையாக ரூ.2 கோடியே 25 லட்சத்து 97,550-ம் சேர்த்து மொத்தம் ரூ.5.89 கோடியில் இந்த மருத்துவமனையில் காத்திருப்பு அறையும், அவர்களுக்கான உணவகமும் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தரைதளம் மற்றும் 4 தளங்களுடன் கூடிய இந்த கட்டிடத்தில் 100 பேருக்குரிய படுக்கை வசதிகளுடன் 12 குளியலறைகள், 16 கழிப்பறைகள் மற்றும் மின்தூக்கி வசதிஅமையவுள்ளது. அதேபோல் இந்த கட்டிடத்தோடு பார்வையாளர்களுக்காக கழிப்பறை மற்றும் சமையலறை வேண்டுமென்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் சொன்னோம். அதையேற்று ரூ.30 லட்சம் தர அந்நிறுவனம் முன்வந்துள்ளது.
அதேபோல், குழந்தைகளுக்கான க்யூமேன் மில்க் வங்கியை இங்கு அமைப்பதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.30 லட்சம் செலவில் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்பை தந்துள்ளது. அந்த பணிகளும் இந்த நிகழ்ச்சியோடு தொடங்கி மிக விரைவில் நடைபெற்று முடியும்.
கருத்தரிப்பு மையங்கள்: மேலும், சென்னை எழும்பூர் மற்றும் மதுரையில் ரூ.5 கோடிமதிப்பீட்டில் கருத்தரிப்பு மையங்கள் அமையவுள்ளன. அதற்கான அரசாணை விரைவில் வெளியாகும். ஆகஸ்ட் மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கருத்தரிப்பு மையங்கள் பயன்பாட்டுக்கு வரும்.
கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் பங்கேற்க யாரையும் வற்புறுத்தவில்லை. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கின்றனர். பதிவு கட்டணம் கட்ட முடியாதவர்களுக்கான கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.