தமிழகம்

கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் ஊழியர்களை நியமிக்க கூடாது: செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பது துறைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, ஒப்பந்த முறையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது என்று தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கப் பொதுச் செயலாளர் த.செ.இந்திரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிண்டியில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தது வரவேற்கத்தக்கது. ஆனால், மருத்துவமனைக்கு நிரந்தர செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியில்அமர்த்தாமல், ஏற்கெனவே செவிலியர் பற்றாக்குறைவாக இருக்கும்பிற மருத்துவமனைகளில் இருக்கும் செவிலியர்களை பணியில்அமர்த்துவது ஆபத்தானதாகும்.

ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளில் 4-ல் ஒரு பங்கு செவிலியர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செவிலியர் பற்றாக்குறைவால் தவித்துக் கொண்டிருக்கின்றன.

கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனியில் செவிலியர் பணியிடங்கள் உருவாக்குவதற்காக பொது சுகாதார துறையில் உள்ள 60 நிரந்தர செவிலியர் பணியிடங்கள் சரண் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே நிரந்தர பணியிடங்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து செவிலியர் பணியிடங்களை சரண் செய்வது துறைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் மூலம் 2015-ல் பணியில் அமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 2 ஆண்டுகளில் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என பணி நியமன ஆணை வழங்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்தும், நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்களை உருவாக்கி, அவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை.

அதேநேரத்தில், கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நிரந்தரபணியிடங்களை சரண் செய்வது மற்றும் ஒப்பந்த முறையில் ஊழியர்களை பணியில் அமர்த்துவது ஆகிய நடவடிக்கைகள், வருங்காலங்களில் அரசின் மருத்துவத் துறையே நிரந்தரமாக இருக்குமாஎன்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த முறை ஒழிக்கப்படும் என்று கூறிவிட்டு, கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பது, மக்களிடம் நம்பிக்கையை குறைக்கும்.

எனவே, ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்துவது போன்ற நடவடிக்கைகளைக் கைவிட்டு, நிரந்தர அடிப்படையில் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT