சென்னை: ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.37.88 கோடியில் சீரமைக்கப்பட்ட 3 சமத்துவபுரங்கள், புதிதாகக் கட்டப்பட்ட அலுவலகக் கட்டிடங்கள், பேருந்து நிலையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊரக வளர்ச்சித் துறை சார்பில், திருவள்ளூர் ராமசமுத்திரம், கடலூர் தொளார், திருச்சி காட்டுக்குளத்தில் ரூ.3.12 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ள 3 பெரியார் நினைவு சமத்துவபுரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது, திருவள்ளூரைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்.
மேலும், ரூ.34.76 கோடியில் கடலூர் ஸ்ரீமுஷ்ணம், திருப்பூர் காங்கயம்,விருதுநகர், திருநெல்வேலி அம்பாசமுத்திரம், திண்டுக்கல் வடமதுரை ஒன்றியங்களில் 5 ஊராட்சி ஒன்றியக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதுதவிர, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் 2 ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகக் கட்டிடங்கள், கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அரியலூர், திருப்பூர் மற்றும் புதிய மாவட்டங்கள் நீங்கலாக 29மாவட்டங்களில் பூமாலை வணிக வளாகங்கள் செயல்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி இருந்த 26 பூமாலை வணிக வளாகங்களைச் சீரமைக்க முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, 26 பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.16 கோடியில் புனரமைக்கப்பட்டன. இவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
மேலும், 2023-24-ம் ஆண்டுக்கான வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும்ஊரகக் கடன்கள் மானியக் கோரிக்கையில், ‘வாழ்ந்து கட்டுவோம்’ திட்டத்தின் கீழ், மகளிர் தொழில் தொடங்குவதற்கும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவற்கும் 1,000 கிராமங்களில், நுண்தொழில் நிறுவனங்களுக்கான நிதித் திட்டம் ரூ.50 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்வாக, 10 மாவட்டங்களைச் சார்ந்த 10 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.5.60 லட்சம் கடனுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிதியாண்டுக்குள் ரூ.50 கோடி கடனுதவி வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வுகளில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஊரக வளர்ச்சித் துறைச்செயலர் ப.செந்தில்குமார், ஆணையர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் ச.திவ்யதர்ஷினி, முதன்மை செயல்அலுவலர் பத்மஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.