சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 6 மற்றும் 7-வது நடைமேடைகளில் நகரும் மின்சார ஏணி (எஸ்கலேட்டர்) செயல்படாததால், மூச்சு வாங்க படிக்கட்டுகளில் சுமைகளுடன் சிரமத்துடன் ஏறிச்செல்லும் முதியோர். படம்: டி.செல்வகுமார் 
தமிழகம்

எஸ்கலேட்டர் இயங்காத எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமைகளை சுமந்து படிகளில் ஏறி மூச்சிறைக்கும் மூத்த குடிமக்கள்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூரில் 6 மற்றும் 7-வது பிளாட்பாரங்களில் நகரும் படிக்கட்டுகள் இயங்காததால் பயணிகள் குறிப்பாக மூத்த குடிமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 114 ஆண்டுகள் பழமையானது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையம் வந்து செல்கின்றன. பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள போதிலும், பயணிகளின் தேவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

எழும்பூர் ரயில் நிலையத்தின் 6 மற்றும்7-வது பிளாட்பாரங்களில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, முத்துநகர் உள்ளிட்ட விரைவு ரயில்கள் புறப்படுகின்றன. மறுமார்க்கத்தில் இந்த ரயில்கள் வந்தடைவதும் பெரும்பாலும் இந்த பிளாட்பாரங்களில்தான்.

ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கானோர் வரும்போது போதிய அளவுக்கு படிக்கட்டு வசதிகளோ, மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு வசதிகளோ இல்லை. அதனால் குறித்த நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் வருவோர் படிக்கட்டுகள், மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகள் அருகே பதற்றத்துடன் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது. அதேபோல் வந்து சேரும் ரயில்களில் இருந்து இறங்கி படிக்கட்டுகளில் கஷ்டப்பட்டு ஏறிச் சென்றுதான் வெளியே வரவேண்டியுள்ளது.

நகரும் படிக்கட்டுகள் இருந்தும் இயங்காததே இதற்கு காரணம். குறிப்பாக மூத்த குடிமக்கள் சுமைகளுடன் படிக்கட்டில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். சுமை தூக்குவோரை பயன்படுத்துவதை தவிர்க்க ஒவ்வொரு படிக்கட்டாக சுமைகளோடு கடும் சிரமத்துடன் ஏறிச் செல்கின்றனர்.

முதியோருடன் வருபவர்கள் அவர்களை கைத்தாங்கலாக அழைத்துப் போகின்றனர். அவ்வாறு யாரும் உடன் வராத முதியோரின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. மக்களின் குறிப்பாக மூத்த குடிமக்களின் நிலையை ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகின்றனர் மூத்த குடிமக்ககள்.

அதிகாரிகள் கருத்து: இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, "எழும்பூர் ரயில்நிலையத்தின் 6,7-வது நடைமேடைக்கு இடையில் நகரும்படிக்கட்டு இருந்தது. இதை அகலப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், நிலைய மறுசீரமைப்பு பணி தொடங்கியதால், நிறுத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் நகரும் படிக்கட்டு செயல்படுத்த ரூ.30 லட்சம்செலவாகும். இதன்காரணமாக, நகரும் படிக்கட்டு செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பயணிகளுக்கான நகரும் படிக்கட்டு வசதி ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. விரைவில், பயணிகளுக்கு தேவையான வசதி செய்து கொடுக்கப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT