குரோம்பேட்டையில் தனியார் துணிக்கடை அருகில் எவ்வித பாதுகாப்பும் இல்லாத வகையில் சாலையை கடக்கும் பொதுமக்கள்.படங்கள்: எம். முத்துகணேஷ். 
தமிழகம்

குரோம்பேட்டையில் தானியங்கி நடைமேம்பாலம் பாதுகாப்பாக சாலையை கடக்க அவசியம் தேவை

பெ.ஜேம்ஸ்குமார்

குரோம்பேட்டை: புறநகரின் முக்கிய வர்த்தகப் பகுதியான குரோம்பேட்டை தனியார் துணிக்கடை சிக்னல் அருகில் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் அதிகம் காணப்படுகிறது. இதனால் சாலையைக் கடப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, இப்பகுதியில் தானியங்கி நடைமேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

தென்சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை, முக்கிய வர்த்தக பகுதியாக மாறி உள்ளது. இங்கு ஜி.எஸ்.டி சாலையை ஒட்டி ஹோட்டல்கள், துணி, நகை மற்றும், வாகன விற்பனையகங்கள் ஏராளமாக உள்ளன. இதே போல் பள்ளி, கல்லூரியும் உள்ளன. இங்குள்ள தனியார் துணி கடை எதிரில், ஜிஎஸ்டி சாலையில் சிக்னல் அமைந்துள்ளது.

இப்பகுதி எப்போதும் நெரிசல் அதிகமாக உள்ளதால் சாலையை கடக்கும் பாதசாரிகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்த பகுதியில் சாலையை கடப்பதற்கு சுரங்கப்பாதை, நடைமேம்பாலம் ௭ன பாதசாரிகளுக்கு வசதிகள் எதுவுமே இல்லை. இதனால் மக்கள் சாலையை கடப்பதற்கு பெரும்பாடு படுகின்றனர்.

ஏற்கெனவே குரோம்பேட்டை ரயில் நிலைய பயணிகளுக்காக ஜிஎஸ்டி சாலையில் பயன்பாட்டில் உள்ள நடைமேம்பாலம் போல, இப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தேவையான நிதி ஒதுக்கி சிக்னல் ௮ருகே தானியங்கி நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால், இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நரசிம்மன் கூறியதாவது: குரோம்பேட்டையில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலத்தில் இருந்து,குரோம்பேட்டை பேருந்து நிலையம் வரை ஜிஎஸ்டிசாலையின் இரு பக்கங்களிலும் உள்ள வர்த்தக நிறுவனங்கள் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை நெடுஞ்சாலைத் துறையும், போக்குவரத்து போலீஸாரும் கண்டு கொள்ளவில்லை.

மேலும் குரோம்பேட்டை பகுதியில் ஏராளமான துணி மற்றும், நகை கடைகள் செயல்படுவதால் பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அந்த நேரங்களில் ஜிஎஸ்டி சாலையை கடப்பதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே இந்த பகுதியில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.

அதேபோல் ஜிஎஸ்டி சாலையில் இருந்து, சி.எல்.சி. ஒர்க்ஸ் லேன் பகுதிக்கு செல்லவும், அங்கிருந்து ஜிஎஸ்டி சாலைக்கு வரவும் பாதையை சீரமைக்க வேண்டும். குரோம்பேட்டை பகுதி ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையவாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசும் நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து இந்த பகுதிக்கு ஒரு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, குரோம்பேட்டை பகுதியில் தானியங்கி நடைமேம்பாலம் தேவை என பொதுமக்களோ, அரசியல் கட்சியினரோ, சமூக ஆர்வலரோ யாரும் எங்களிடம் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. அவ்வாறு கோரிக்கை வைக்கப்பட்டால் அது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT