தமிழகம்

தினமும் 50 பேர் மட்டுமே என்ற கட்டுப்பாடு ரத்த பரிசோதனைக்கு இனி இல்லை: பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை அறிவித்தது

செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு ரத்த பரிசோதனைக்கு வரும் அனைத்துநோயாளிகளுக்கும் பரிசோதனைமேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே ரத்த பரிசோதனை என்ற நடைமுறை கைவிடப்பட்டது. இதனால் தொலைதூரங்களில் இருந்து வரும் நோயாளிகள் குறிப்பாக முதியோர் நிம்மதியடைந்துள்ளனர்.

'தினமும் 50 பேருக்கு மட்டுமே ரத்த பரிசோதனை - நோயாளிகளை சோதிக்கும் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை' என்ற தலைப்பில்கடந்த 20-ம் தேதி ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. அதில், தெற்குரயில்வே தலைமை மருத்துவமனை சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இடவசதி இல்லாததால், அதே பகுதியில் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

அங்குள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் ரத்த பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 50 பேருக்கு மட்டுமே ரத்த பரிசோதனை செய்யப்படுவதால், தொலை தூரத்தில்இருந்து வரும் வயதான நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், ஒரு நாளைக்கு 50 பேருக்குமட்டுமே ரத்த பரிசோதனை என்பதை கைவிட வேண்டும். மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்” தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், தினமும் 50 பேருக்கு மட்டும் ரத்த பரிசோதனை என்பதைகைவிட்டு, மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் தொலை தூரங்களில் இருந்து வரும் நோயாளிகள் அங்கேயே தங்கி வரிசையில் வந்து ரத்த பரிசோதனை செய்தனர்.

தற்போது அந்த நிலை மாறியுள்ளது. அதிகாலையிலேயே வந்து காத்திருக்காமல், பொறுமையாக வந்து ரத்த பரிசோதனை செய்து கொள்கின்றனர். இதனால் நிம்மதி அடைந்த நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கும் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT