தமிழகம்

‘தமிழ் மண் வளம்’ இணையதளம் தொடக்கம்: வேளாண் துறை சார்பில் ரூ.69 கோடியில் கட்டிடங்கள் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வேளாண் துறை சார்பில் ரூ.68.82 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள மண் வளம் தொடர்பான இணையதளத்தையும் அறிமுகம் செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண் துறை சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தருமபுரி - அரூர், சிவகங்கை ஆகிய 3 இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், மதுரை - விநாயகபுரம், கடலூர் - அண்ணா கிராமம், ஈரோடு - ஆலுக்குளி, திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஆரணி, செங்கல்பட்டு - மதுராந்தகம், காஞ்சிபுரம் - சுங்குவார்சத்திரம், கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை, அரியூர், விழுப்புரம் - சிறுவந்தாடு, தஞ்சாவூர் - தென்னூர், திருவாரூர் - பெருந்தரக்குடி, மேலநத்தம், காளாஞ்சிமேடு ஆகிய இடங்களில் ரூ.68.82 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு வசதியுடன் கூடிய துணை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கான கல்விசார் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து, பனையின் சிறப்பை பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வேளாண் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘நெட்டே நெட்டே பனைமரமே’ என்ற காலப்பேழை புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார்.

நாட்டிலேயே முதல்முறையாக, வேளாண்மை - உழவர் நலத் துறை மூலம் உருவாக்கப்பட்ட ‘தமிழ் மண் வளம்’ எனும் இணைய முகப்பை (http://tnagriculture.in/mannvalam) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விவசாயிகள் கணினி, கைபேசி மூலமாக இந்த இணையதளத்தை அணுகலாம். நாட்டுக்கே முன்னோடியாக இந்த வசதி அமைந்துள்ளது.

இந்த இணைய முகப்பில், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், மண் வளம் குறித்த அனைத்து விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அவர்களது கைபேசியில் மண் வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும்.

SCROLL FOR NEXT