சிவகிரிபட்டி பைபாஸ் சாலையில் இருந்து பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் சாலையில் சாக்கடை கால்வாயில் கிடக்கும் குப்பைகள். 
தமிழகம்

சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தால் திணறும் பழநி

செய்திப்பிரிவு

பழநி: பழநியில் சாலையோரம், சாக்கடை கால்வாயில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பக்தர்களும், பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆன்மிக நகரம் என்பதால் கடவுள் பக்தி, சுத்தமான சுற்றுப்புறம், தூய்மையான காற்று அமையப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பழநியில் எல்லாம் தலைகீழ். பழநி மலையடிவாரம் பகுதியை தவிர, நகர் பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு தலைவிரித்தாடுகிறது.

குறிப்பாக, சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை வழியாக பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் சாலையோரங்களில் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. அவற்றை அன்றாடம் அகற்றாமல் அங்கேயே தீ வைத்தும் எரிப்பதால், அவ்வழியாக செல்பவர்கள் புகையால் அவதிக்குள்ளாகின்றனர்.

சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி குப்பைகள் அடைத்துள்ளன. பழநி தேவஸ்தானத்துக்கு சொந்தமான இலவச வாகனம் நிறுத்துமிடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இது போன்ற சுகாதாரச் சீர்கேடால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். ஆன்மிக நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள பழநி நகராட்சியும், ஊராட்சி நிர்வாகமும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ராம்குமார் கூறியதாவது: பழநி குளத்து சாலை, பூங்கா சாலை, சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை குப்பை குவிந்து கிடக்கிறது. சாக்கடை கால்வாயிலும் குப்பையைக் கொட்டி வைத்துள்ளதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நின்று சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

அதில் கொசு உற்பத்தியாகி நோய் பரப்பும் இடமாகவும் மாறுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரும் புகழ்பெற்ற ஆன்மிக நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள பழநி நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும், என்று கூறியுள்ளார்.

இது குறித்து பழநி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், சிவகிரிபட்டி பைபாஸ் சாலையில் குப்பை கொட்ட கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி சிலர் இரவில் குப்பையை கொட்டிச் செல்கின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் சுகாதார பணியாளர்கள் மூலம் உடனே அகற்றப்படுகிறது, என்று கூறினர்.

SCROLL FOR NEXT