தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதைக் கைவிடக் கோரி, ஈரோடு காளைமாடு சிலை அருகே, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை கைவிடக் கோரி ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

ஈரோடு: தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதைக் கைவிடக் கோரி, ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 7-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணிகளை, ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுப்பதை கைவிடக்கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆறு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆறாவது நாளான நேற்று, ஈரோடு காளை மாடு சிலை அருகில், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

இதில் சுப்பிரமணியன் (சிஐடியு), தங்கமுத்து (எல்பிஎப்) உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் தெற்கு மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் சுந்தரராஜன், காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரதத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தின் நிறைவாக நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இன்றும் (29-ம் தேதி) வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்வது என்றும், பக்ரீத் விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் வீட்டில் ஓய்வெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் இன்று கூடி விவாதித்து, அடுத்தகட்ட போராட்டத்தை முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதனிடையே, 6-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், ஈரோடு நகரில் குப்பை தேங்கி சுகாதாரச் சீர்கேடு தொடர்கிறது. நிரந்தரப் பணியாளர்களாக உள்ள தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில், குப்பைகளை அகற்றி வருகின்றனர். 6-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், ஈரோடு நகரில் குப்பை தேங்கி சுகாதாரச் சீர்கேடு தொடர்கிறது.

SCROLL FOR NEXT