தமிழகம்

தமிழகத்தில் ஒப்பந்தப் பணியை ஒழிக்க வேண்டும்: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன்

இ.மணிகண்டன்

விருதுநகர்: கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்செய்யும்போது விஷ வாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 1993 முதல் 2003 வரை 225 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களிடம் நலன் மற்றும் குறைகள் குறித்துக் கேட்டறிந்தார். எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் அளித்த பேட்டியில், "பல்வேறு குறைகளை பணியாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக சிவகாசி அரசு மருத்துவமனையில் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் சுகாதாரத்துறை செயலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன். விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.458 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஊதியம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. 2 வாரத்தில் நிர்ணயம் செய்யப்படும்.

தேசிய அளவில் உள்ள ஆணையத்தை மாநில அளவிலும் அமைக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு கடன் வழங்கும் அமைப்பையும் மாநில அளவில் வேண்டும் என கேட்டுள்ளோம். நாட்டில் 11 மாநிலங்களில் மாநில அளவிலான ஆணையம் செயல்படுகிறது. தமிழகத்தில் தூய்மைப் பணியாளர் நல வாரியம் உள்ளது. வாரியத்திற்கு முழுமையான அதிகாரம் உள்ளதா என்பது யாரும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. எனவே, ஆணையம் அமைக்க வேண்டும். ஆணையம் இருந்தால் சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கும்.

தமிழகம் முழுவதும் உள்ள ஒப்பந்த பணி என்பதை ஒழிக்க வேண்டும். ஏனெனில், அரசு நிர்ணயிக்கும் ஊதியம் வழங்கப்படுவதில்லை. விடுமுறை இல்லை. பணிக்கு வந்தால்தான் ஊதியம் என்ற நிலை உள்ளது. தொழிலாளர் சட்டப்படி மாதம் 4 நாள் விடுமுறை அளிக்கப்படுவதில்லை. அனைவரையும் நிரந்தப் பணியாளர்களாக ஆக்க வேண்டும். இல்லையெனில் கர்நாடக, ஆந்திராவைப் போல தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்கும் திட்டத்தை (டிபிஎஸ்) கொண்டுவர வேண்டும்.

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்செய்யும்போது விஷ வாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 1993 முதல் 2003 வரை 225 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களில் குறைவாக உள்ளது. இது தமிழகத்திற்கு இழுக்கு. மனிதர்களை பயன்படுத்தாமல் இயந்திரங்களை பயன்படுத்தினால் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். அதோடு, தொழிலாளர்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் ஏற்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் துப்புரவுப் பணியில் நிரந்தப் பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 7 லட்சம் பேர் உள்ளது. பணி பாதுகாப்பு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறைந்த பட்ச ஊதியம் வழங்குவதை மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நிர்ணயித்து அது முழுமையாகக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஊதிய வேறுபாட்டை தமிழக அரசு ஒழிக்க வேண்டும். பெண்களுக்கு குறைந்த ஊதியமும், ஆண்களுக்கு சற்று ஊதியம் உயர்வாகவும் வழங்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்.

தூய்மைப் பணிக்கு ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் பணியாளர்களுக்கான காப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டும். இதை, ஒப்பந்தம் விடும் நகராட்சி, மாநகராட்சி இதில் கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக மாநில அரசு அரசாணை வெளியிட வேண்டும். விதிமுறைகளை மீறும் ஒப்பந்த நிறுவனங்கள் கருப்புப் பட்டயிலில் வைக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு 12 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன. இந்நிறுவனங்கள் மீது வழக்கும் தொடர வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT