தமிழகம்

குமரியில் கால்வாய்கள் தூர் வாராததால் 3,000 ஏக்கரில் சாகுபடி கேள்விக்குறி!

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் குளத்து பாசனத்தில் 3,000 ஹெக்டேருக்கு மேல் கன்னிப்பூ சாகுபடிக்கான பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதே நேரம் அணைகளில் தண்ணீர் திறந்து 27 நாட்கள் ஆன பின்னரும் பாசன கால்வாய்களில் முறையாக தண்ணீர் வராததால் இந்த ஆண்டு ஆற்றுப்பாசன சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இருபோக நெல் சாகுபடி பணிகள் நடைபெறுகின்றன. கன்னிப்பூ சாகுபடி பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல் விவசாய வயல்களின் பரப்பு 6,000 ஹெக்டேராக சுருங்கி விட்ட நிலையில் பாசன கால்வாய்களை தூர்வாராமல் கடந்த 1-ம் தேதி முதல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஏற்கெனவே குளங்களில் தண்ணீர் ஓரளவு இருந்ததால் குளத்து பாசனத்தை நம்பியுள்ள சுசீந்திரம், இறச்சகுளம், தேரூர், திருப்பதிசாரம், வேம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான வயல்களில் நாற்றங்கால் நடப்பட்டு ரசாயன உரம் இடும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை குளத்து பாசனத்துக்கு உட்பட்ட 3,000 ஹெக்டேர் வயல் பரப்புகளில் மட்டும் நெல் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. அதே நேரம் முறையான திட்டமிடுதல் இன்றி கால்வாய்களை தூர்வாராமல் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேரவில்லை.

இதைப்போல் இரட்டைக்கரை கால்வாய், அனந் தனார் கால்வாய் உட்பட முக்கிய பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தற்போது மாவட்டம் முழுவதும் கால்வாய்களை தூர்வாரி வருகின்றனர்.

தூர்வாரும் பணி முடிந்து, தண்ணீர் விட்ட பின்பு ஆற்றுப்பாசன பகுதிகளில் நடவு பணி மேற்கொண்டால் காலதாமதமாகி பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதால், இந்த கன்னிப்பூ பருவம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்ட விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். 3,000 ஹெக்டேருக்கு மேல் ஆற்றுப்பாசன வயல்பரப்புகள் தரிசாகவே கிடக்கின்றன.

SCROLL FOR NEXT