மனோகரன் 
தமிழகம்

காரைக்குடி நகராட்சி மதிமுக கவுன்சிலர் திடீர் ராஜினாமா

செய்திப்பிரிவு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மதிமுக கவுன்சிலர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக நகராட்சித் தலைவரிடம் கடிதம் கொடுத்தார்.

காரைக்குடியில் கடந்த ஆண்டு நடந்த நகராட்சித் தேர்தலில் 36 வார்டுகளில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு வார்டு ஒதுக்கப்பட்டது. மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மனோகரன் 14-வது வார்டில் திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நேற்று கவுன்சிலர் மனோகரன் சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக நகராட்சித் தலைவர் முத்துத்துரையிடம் கடிதம் கொடுத்தார்.

இதுகுறித்து மனோகரன் கூறுகையில், தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனது வார்டில் மக்கள் ஆதரவோடு தொடர்ந்து வளர்ச்சிப் பணிகளைச் செய்து வந்தேன். எனது சொந்த காரணத்துக்காக ராஜினாமா செய்தேன் என்று கூறினார்.

இதுகுறித்து முத்துத்துரையிடம் கேட்டபோது, ராஜினாமா குறித்து மறுபரிசீலனை செய்ய அவருக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT