சென்னை: குற்றங்களின் விகிதம், தன்மையை அடிப்படையாக வைத்து, குற்றச்செயல்களை முன் கூட்டியே தடுக்கும் வகையில் புவியியல் தகவல்அமைப்பு வரைபடம் மூலம் கண்காணிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக குற்றச்சம்பவங்களில் இருப்பிடத்தை உடனே அறிந்து தடுக்க ஏதுவாக,குற்றத் தொகுப்புகளை அடிப்படையாக வைத்து ‘புவியியல் தகவல் அமைப்பு வரைபடம் மூலம் கண்காணிக்கும் திட்டம்’ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தின்8-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள இதன் கட்டுப்பாட்டு அறையைகாவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் கடந்த 7 ஆண்டுகளில் (2016-2022) நடைபெற்ற கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஆள் கடத்தல் உட்பட 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றப்பதிவுகள் துல்லியமாகச் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. மேலும்,இவை எந்த வகை குற்றங்கள்,எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்தநாளில் நடைபெற்றன உட்பட அனைத்து வகையான தகவல்களும் திரட்டப்பட்டு வரைபடமாக்கப்பட்டுள்ளன.
மேலும், நகர் முழுவதும் உள்ள67 ஆயிரம் கேமராக்களின் அமைவிடம், பள்ளி, கல்லூரிகள், பெண்கள் விடுதிகள், மருத்துவமனைகள், வங்கிகள், ஏடிஎம் மையங்கள் உள்ளிட்டவையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியிலிருந்து பெறப்பட்ட பிற முக்கியமான தரவுத் தொகுப்புகள், சமூகநலத் துறை மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் போன்ற துறைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஓர் இடத்தில் குற்றம் நடைபெற்றால் அருகில் உள்ள ரோந்து போலீஸாரை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லவைக்க முடியும். மேலும், குற்றவாளி தப்பிச் சென்றால் அவர் எந்த வழியாக தப்பிச் சென்றிருக்க வேண்டும், அவரது உருவம் எந்த கேமராவில் துல்லியமாக பதிவாகி இருக்கும்போன்ற விவரங்களையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடம்மூலம் தெளிவாகக் கண்டறிய முடியும்.
பெண்கள், குழந்தைகள் மற்றும்பொதுமக்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பகுப்பாய்வு செய்து போலீஸார் விரைவானமுடிவு எடுக்க புவியியல் தகவல்அமைப்பு வரைபடம் பெரிதும் உதவும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), லோகநாதன் (தலைமையிடம்), கபில் குமார் சி.சரத்கர் (போக்குவரத்து) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.