சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர், 986 மருந்தாளுநர் இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) வெளியிட்டது. எம்பிபிஎஸ் படித்து முடித்த 25 ஆயிரம் மருத்துவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதிதமிழகம் முழுவதும் 91 மையங்களில் தேர்வு நடந்தது.
அதேபோல், 986 மருந்தாளுநர் பணியிடத்துக்கான அறிவிப்பை தேசிய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிட்டுள்ளது. டிப்ளமோ, பிபார்ம் மற்றும் பார்ம் டிபடித்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
கடந்த ஏப்ரல் 26, 27-ம் தேதிகளில் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் இரு பிரிவுகளாகத் தேர்வு நடைபெற்றது. மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழி தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் தேர்வுக்கான விடை குறிப்புகள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள தேசிய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஒரு வாரத்தில் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட முடிவு செய்துள்ளது. பின்னர், தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்ததும், கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.
ஊக்க மதிப்பெண்: இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் மு.அகிலன் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ``கரோனா பெருந்தொற்று காலத்தில் 2 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
அவர்களின் உழைப்பையும், தன்னல மற்ற சேவைகளையும், அங்கீகரிக்கும் விதத்தில் எம்ஆர்பி தேர்வில் பணிக்காலத்துக்கேற்ப குறிப்பிட்ட சதவீத ஊக்க மதிப்பெண்கள் வழங்கக் கோரியிருந்தோம். தாங்களும் அதை ஏற்றுஅவர்களது பணி அங்கீகரிக்கப்படும் என உறுதியளித்திருந்தீர்கள்.
எம்ஆர்பி தேர்வு முடிவு வெளியாகியிருக்கும் இவ்வேளையில், குறைந்தபட்சம் 6 மாத காலம்பணியாற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்க மதிப்பெண்வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.