வேலூர்: மேல்பாடி காவல் நிலையம் முன்பாக தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டும், நிவாரணம் வழங்கக் கோரியும் வேலூரில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காட்பாடி அடுத்த குகையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை மேல்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி அவதூறாக பேசியதால் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உயிரிழப்புக்கு நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் குகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பங்கேற் றவர்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கமிட்டனர்.
இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தயாநிதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் காத்தவராயன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, வழக்கு விசாரணையில் நீக்கப் பட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவை சேர்க்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவா ரணம் மற்றும் அரசுப் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர்.
அப்போது, ‘அடுத்த 15 நாட் களுக்குள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், நிவாரணம் வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’ என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையேற்று, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.