மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 11 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (27ம் தேதி) மதியம் 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பை பொறுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்தையடுத்து, உரிய நாளான ஜூன் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து கடந்த 14 நாட்களாக 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 மணி முதல் அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே, டெல்டா பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்துள்ளால், மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 11 ஆயிரம் கன அடியில் இருந்து, நேற்று மதியம் 12 மணி முதல் விநாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 176 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 126 கன அடியாக சரிந்துள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 93.32 அடியாகவும், நீர் இருப்பு 56.52 டிஎம்சியாகவும் சரிந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டும் நிலையில், இடது கரைப்பகுதியில் 16 கண் பாலத்தின் மதகுகளில் தண்ணீர் நிறைந்து காணப்படும். 120 அடியை எட்டும் போது, தண்ணீர் நிரம்பி வெளியேறும். மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி 100 அடியை எட்டியது. பின்னர், அணையின் நீர்மட்டம் 340 நாட்களாக 100 அடியாக நீடித்த நிலையில், கடந்த 18ம் தேதி 100 அடிக்கு கீழ் சரிந்தது. தற்போது, நீர்மட்டம் 93 அடிக்கு கீழ் சென்ற நிலையில், அணையின் 16 கண் மதகுகளில் பராமரிப்பு பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.