சேலம் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவரை அலுவலகத்திற்கு சென்று பணி செய்ய விடாமல் தடுக்கும் விதமாக, துணைத் தலைவர், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தனி பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேலத்தாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார் கலா (திமுக). கடந்த சில தினங்களுக்கு முன், பணி முடித்து விட்டு அலுவலகத்தைப் பூட்டி விட்டுச் சென்றார் கலா. இந்நிலையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாமலை அந்த பூட்டின் மீது மற்றொரு பூட்டைப்போட்டு பூட்டி உள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட யாரும் அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால், நேற்று காலை ஊராட்சி மன்றத் தலைவர் கலா, அலுவலக வாயிலில் மேஜை போட்டு மக்களிடம் குறைகளை கேட்டார்.
இது குறித்து ஊராட்சி மன்றத்தலைவர் கலா கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற் காக துணைத் தலைவர் அண்ணா மலை (அதிமுக), என்னை புறக்கணித்து வருகிறார். நான் அலுவலகத்திற்குள் செல்லக் கூடாது என்பதற்காகவே, அவர் இரண்டாவதாக ஒரு பூட்டு போட்டுச் சென்றுள்ளார். பூட்டைத் திறக்க கோரினால் தாழ்த்தப்பட்டவரின் கீழ் பணியாற்ற முடியாது என்று கூறி வருகிறார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.