சென்னை: டெல்லி செல்லும் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னைக்கு காலை 8.45 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் அந்த விமானம் காலை 10.05 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும். நேற்று டெல்லி செல்வதற்காக 148 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், விமானம் பிற்பகல் 2.30 மணிக்குதான் புறப்படுமென அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, பயணிகள் கேட்டதற்கு காலை 10.20 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது. சென்னையில் சிங்கப்பூருக்கு காலை 11.30 மணிக்கு புறப்படும் விமான பயணிகளை, டெல்லிக்கு போக வேண்டிய விமானத்தில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கிறோம்.
சிங்கப்பூரில் இருந்து தாமதமாக வரும் விமானத்தில், டெல்லி செல்ல வேண்டிய பயணிகளாகிய உங்களை பிற்பகல் 2:30 மணிக்கு டெல்லிக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாகஅங்கு வந்த அதிகாரிகள் பயணிகளை சமாதானம் செய்தனர். மிகவும் அவசரமாக செல்ல இருந்தசுமார் 20 பயணிகளை மட்டும் காலை11:30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
மற்ற பயணிகள் சென்னை விமான நிலையஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், சிங்கப்பூரில் இருந்துவந்த விமானத்தில் பயணிகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.