போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை அண்ணா நகர் வளைவு அருகே நேற்று நடந்தது. பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். உடன் ஐ.ஜி. ராதிகா, காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர். 
தமிழகம்

பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை: கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்தால், கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் நேற்று (ஜூன் 26) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை அண்ணாநகர் வளைவு அருகே மதுவிலக்கு அமலாக்கப் பணியகம், அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விளக்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

போதை இல்லாத தமிழகம் உருவாக, அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். இதற்காக அடிக்கடி சோதனை நடத்துகிறோம். கஞ்சாவை முற்றிலும்ஒழிக்க, கஞ்சா வேட்டை நடத்தப்படுகிறது. போதைப் பொருள் வழக்குகளில் தொடர்பு உடையவர்களிடம் இருந்து கடந்த ஆண்டு ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் சாலை சந்திப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இது உலக சாதனை. கடந்த 2 ஆண்டுகளாக ஆங்காங்கே போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்பட்டு வந்தது. அதை கணிசமாக தடுத்துவிட்டோம். கஞ்சா வியாபாரிகளின் 5,000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோ, இந்த ஆண்டு 13 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஐ.ஜி. ராதிகா, காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT