செல்வலட்சுமி கணேசராஜா 
தமிழகம்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் செல்வலட்சுமி சென்னையில் காலமானார்

செய்திப்பிரிவு

சென்னை: அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் (மருத்துவமனை) இயக்குநரும், கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் செல்வலட்சுமி கணேசராஜா (62) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிற்பகலில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

பெண்களிடையே ஏற்படும் பேறு கால புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்களைத் தடுப்பதற்காக முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மருத்துவ சேவை ஆற்றிய செல்வலட்சுமியின் மறைவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த 1961-ல் பிறந்த செல்வலட்சுமி புற்றுநோய் மருத்துவத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றியுள்ளார். அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்து மறைந்த மருத்துவர் வி.சாந்தாவின் வழிகாட்டுதலுடன் மார்பகப் புற்றுநோய், பேறு கால புற்றுநோய் சிகிச்சைகளில் பல்வேறு புதிய நுட்பங்கள், பரிசோதனைகள், தடுப்பு முறைகளை செல்வலட்சுமி நன்கு கற்று நோயாளிகளுக்கு மருத்துவ சேவையாற்றினார்.

அவரது சேவையைப் போற்றும் வகையில் தமிழ்நாடு டாக்டர்எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் கடந்த 2012-ல் சிறந்த மருத்துவர் விருதை செல்வலட்சுமிக்கு வழங்கி கவுரவித்துள்ளது. செல்வலட்சுமிக்கு ஒரு சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர்.

SCROLL FOR NEXT