கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் சாலையின் நடுவே மின் கம்பங்கள் உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது என்று ‘இந்து தமிழ் திசை' உங்கள் குரல் பகுதியில் வாசகர்கள் பலர் புகார் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: கடலூர் மாவட்டம் இயற்கை பேரிடர்களை சந்திக்கும் மாவட்டமாக உள்ளது. புயல், மழை வெள்ளத்தின்போது மின்கம்பங்கள் சேதமடைகின்றன. இதனால் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில், கடலோர பகுதிகளில் புதைவட கேபிள் மூலம் மின்சாரம் வழங்க அரசு முடிவு செய்தது. அதன்படி கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் புதைவட கேபிள் அமைக்கப்பட்டது.
இதில் மஞ்சக்குப்பம், நேரு நகர், புதுக்குப்பம், வண்ணாரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதைவட கேபிள் அமைத்தும், இதுவரை மின் கம்பங்கள் மூலமாகத் தான் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் பெரும்பாலான மின் கம்பங்கள் சாலையின் நடுவிலேயே உள்ளன. அதாவது, மஞ்சக் குப்பம் லட்சுமி நகர் குறுக்கு தெருவில் அடுத்தடுத்து 3 மின் கம்பங்களும், நேரு நகரில் ஒரு மின் கம்பமும், ஞான பிரகாசம் நகரில் 5-க்கும் மேற்பட்ட கம்பங்களும் சாலையின் நடுவில் உள்ளன.
அதேபோல் திருமலை நகரில் கால்வாயின் நடுவில் மின்கம்பம் உள்ளது. அந்த பகுதிகளில் சாலை அமைக்கப்படும் போதும், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போதும், மின்கம்பங்களை மாற்றி அமைக்கக் கோரி மின்சார வாரியத்தில் ஒப்பந்ததாரர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. மின் கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்காமல், ஏற்கெனவே இருந்த இடத்திலேயே மின்கம்பங்களை சுற்றி சாலை அமைத்துவிட்டனர்.
இதனால் அந்த மின் கம்பங்கள் தற்போது சாலையின் நடுவில் உள்ளன. அதுபோல் கால்வாயின் நடுவில் மின்கம்பம் இருக்கும்படி, கழிவுநீர் கால்வாயும் அமைத்துள்ளனர். இந்த மின்கம்பங்களை அகற்றி சாலையோரத்தில் நட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின் றனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாலையின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளதால் அவ்வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் பொது மக்கள் தவிக்கின்றனர்.
மேலும், மழைக் காலங்களில் மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. அதனால் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை மாற்றி, சாலை ஓரத்தில் நடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இது பற்றி கடலூர் மின்துறை கோட்டப் பொறியாளர் சதாசிவத்திடம் கேட்டபோது, “அந்த பகுதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.