தமிழகம்

ஆவடியில் ஒரு அத்திப்பட்டி..! - 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்யாமல் புறக்கணிப்பு

ப.முரளிதரன்

சென்னை: ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகளாகியும் இதுவரை குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சிக்குட்பட்ட ஏரியில் கடந்த 1993-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. 115 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த ஏரி ஆறு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, 3,700 மனைகள் உருவாக்கப்பட்டன. தற்போது, இந்தக் குடியிருப்பில் ஆறாயிரம் வீடுகள் உள்ளன. இதில், 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இக்குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை, சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என அங்கு வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர் ஏ.தரணிதரன் கூறியதாவது: ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், கடந்த 1992-ம் ஆண்டுமேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. புழல் ஏரியில் இருந்துதண்ணீர் கொண்டு வந்து இத்தொட்டியில் நிரப்பி விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டது.

ஆனால், குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதற்கிடையே, கடந்த 2010-ம் ஆண்டு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.9.54 கோடி செலவில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகள் ஆகியும் இவை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளன.

மேலும், 30 சென்ட் நிலத்தில் 14 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. இதுநாள் வரை இக்கட்டிடமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பாழடைந்து விட்டது. இடிந்து விழும் நிலையில் உள்ள இக்கட்டிடத்தில் தற்போது நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் கட்டுவதற்காக ஒன்றரை கிரவுண்ட் நிலம் ஒதுக்கப்பட்டு கட்டிடம் கட்டுவதற்காக பணமும் கொடுக்கப்பட்டது.

ஆனால், இதுவரை கட்டிடம் கட்டப்படவில்லை. இதேபோல், பேருந்து நிலையத்துக்கு 1.54 ஏக்கர் நிலம் மற்றும் மருத்துவமனை, அஞ்சல் நிலையம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இதுவரை அந்தந்த துறைகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக, சம்மந்தப்பட்ட துறையினர் பணம் கட்டி இடத்தை வாங்க வேண்டும் என வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விற்று லாபம் பார்க்கும் தனியார் நிறுவனங்களை போல வீட்டு வசதி வாரியம் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இக்குடியிருப்பில் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான எவ்வித பணிகளையும் தொடங்கவில்லை.

இக்குடியிருப்பு மனைகளுக்கு தனிப் பட்டா வழங்க அரசு அரசாணை பிறப்பித்த பிறகும் இதுவரை ஆவடி வட்டாட்சியர் பட்டா வழங்காமல் தாமதப்படுத்தி வருகிறார். மக்கள் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மனைகளுக்கு சட்டவிரோதமாக அப்ரூவல் வழங்கும் முடிவை சி.எம்.டி.ஏ நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு கூறினார்.

இக்குடியிருப்பில் வசிக்கும் மக்கள் கூறியதாவது: நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். ஆனால், இங்கு போதிய அடிப்படை வசதிகள்இதுவரை செய்யப்படவில்லை, குறிப்பாக, பல தெருக்களில் இதுவரை சாலைகள் செப்பனிடப்படவில்லை. மண் சாலைகளாகவும், குண்டும் குழியுமாக உள்ளன. இதனால், சிறிய மழை பெய்தாலே சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விடுகின்றன.

இதனால், நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதேபோல், எங்கள் குடியிருப்பின் பின்பகுதியில் பருத்திப்பட்டு ஏரி உள்ளது. ஆவடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பக்தவச்சலபுரம், திருமலைராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் எங்கள் குடியிருப்பு வழியாக சென்று இந்த ஏரியில் கலக்கிறது.

இந்தக் கழிவு நீர் திறந்தவெளி கால்வாயாக இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்திக்கான முக்கியப் பகுதியாகவும் திகழ்கிறது. அத்துடன், மழைக் காலங்களில் இந்தக் கால்வாய் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி கழிவுநீர் தேங்குகிறது. இந்தக் கால்வாயின் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இந்தக் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

எனவே, இத்தகையஅடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். மேலும் அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் வரும்அத்திப்பட்டி போல தங்கள்பகுதி புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து, ஆவடி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆவடி-பூந்தமல்லி சாலையில் குழாய் பதிக்கப்பட்டது. இந்நிலையில், அச்சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடப்பதால், குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, 2 மாதங்களுக்குள் இப்பணி முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும். சாலை வசதிகள் தற்போது ஒவ்வொரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் மற்ற அடிப்படை வசதிகளும் செய்யப்படும் என்றனர். பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை விற்கும் திட்டம் குறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் அதற்குபதில் அளிக்க மறுத்து விட்டனர்.

SCROLL FOR NEXT