தமிழகம்

வாடல் நோயால்வாடிய தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தும் பொள்ளாச்சி விவசாயிகள்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: தென்னை மரங்களை தாக்கும் நோயை கட்டுப்படுத்த முடியாததாலும், தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும் பராமரிப்புப் பணிக்கு செலவிட முடியாததால் தென்னை மரங்களை வெட்டி விவசாயிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை வட்டாரங்களில் தென்னை சாகுபடி பிரதான வேளாண் தொழிலாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக கொப்பரை, தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே வேளையில் தென்னை மரங்களை தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

வெள்ளை ஈ தாக்குதல் தென்னந் தோப்புகளில் நிரந்தரமாகிவிட்ட நிலையில், தஞ்சாவூர் வாடல் நோய், கேரளா வாடல் நோய் என பலவகை வாடல் நோய்களும் பரவி வருகின்றன. பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரத்தில் கேரளா வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டுப்பொறி அமைத்தல், வேரில் மருந்து மற்றும் நுண்ணூட்டம் கட்டுதல், வேப்பம் புண்ணாக்கு இடுதல் என தொடர்ந்து விவசாயிகள் தென்னை பராமரிப்புப் பணிக்கு செலவிட்டு வருகின்றனர்.

அதேசமயம், வாடல் நோயை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். தென்னந்தோப்புகளின் நோய் தடுப்பு பணிகளுக்காக மட்டுமே மாதம்தோறும் பல ஆயிரம் ரூபாயை விவசாயிகள் செலவிடுகின்றனர். அதேநேரம் தேங்காய் விலை ரூ.10-க்கு கீழ் குறைந்து விட்டதால், நோய் தடுப்பு மேலாண்மைக்கு செலவிட முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் காய்ப்பு குறைந்த, நோய் தாக்குதலுக்கு உள்ளான, வயதான மரங்கள் என சுமார் 30 ஆண்டுகள் வரை பராமரித்த தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது: தென்னையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இளநீர், தேங்காய், கொப்பரை, தேங்காய் மட்டை என அனைத்தும் விலை சரிந்து விட்டது. உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால் தென்னந்தோப்பின் பராமரிப்பு செலவைக் கூட சமாளிக்க முடியவில்லை.ரூ.10-க்கு 3 தேங்காய் என்ற அளவுக்குவிலை சரிந்து விட்டது.

இதனால் உரம், மருந்து, தேங்காய் பறிப்பு, தேங்காய் உரிக்கும் கூலி என செலவுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக குழந்தை போல பார்த்துப்பார்த்து வளர்த்த தென்னை மரங்களை வெட்டி மரக்கடைக்கு அனுப்புவது வேதனையாக உள்ளது, என்றனர்.

SCROLL FOR NEXT