நாமக்கல்: நாமக்கல் பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் நிலவி வருகிறது. இதை தவிர்க்க அப்பகுதியில் போக்குவரத்து காவல் துறையினரை நியமித்து வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் நகரப் பேருந்துகளும், மற்றொரு பகுதியில் வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் புறநகர் பேருந்துகளும் மற்றும் மினி பேருந்துகளும் நிறுத்தப்படுகின்றன.
இதில் புறநகர் பேருந்துகள் மற்றும் மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் இருந்து வரும் நகரப் பேருந்துகள் திருச்சி சாலையில் அமைந்துள்ள பேருந்து நிலைய நுழைவு வாயில் வழியாக பேருந்து நிலையத்திற்குள் நுழைகின்றன.
இந்த நுழைவுப் பகுதி மிக நெருக்கடியான சந்திப்பைக் கொண்டது. அதனால் நுழைவு வாயில் வழியாக பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்லும்போது வாகனப் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்துடன் இப்பகுதியை கடக்க வேண்டிய நிலை உள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதை தவிர்க்க இப்பகுதியில் போக்கு வரத்து காவலரை நிரந்தரமாக நியமித்து வாகனப் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து நாமக்கல் நகர மக்கள் கூறுகையில், நாமக்கல் பேருந்து நிலைய நுழைவுப் பகுதி திருச்சி சாலை, மோகனூர் சாலை மற்றும் சேந்தமங்கலம் செல்லும் சாலை ஆகிய 3 சந்திப்புகளைக் கொண்டது. காலை, மாலை வேளை மட்டுமின்றி நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அதிகம் இச்சாலையை நடந்தும், வாகனங்களில் கடந்தும் செல்கின்றனர். அப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் நேரம் விரயமாகிறது. சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சில ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து காவல் துறையினரை நியமித்து வாகனப் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வந்தது.
தற்போது அங்கு போக்குவரத்து காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனைத் தவிர்க்க அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து காவல் துறையினரை நியமித்து வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். குறைந்த பட்சம் காலை, மாலை வேளைகளிலாவது காவலர்களை பணியில் அமர்த்தி வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்,என்றனர்.