தமிழகம்

குண்டர் தடுப்புச் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது - டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: குண்டர் தடுப்புச்சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக்கூடாது என தமிழக டிஜிபிக்கு, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்தியுள்ளார்.

அடிக்கடி குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர், கொலை, கொள்ளை,மோசடி போன்ற கடுமையான வழக்குகளில் கைது செய்யப்படுவோர், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு ஓராண்டுக்கு ஜாமீன் கிடையாது. இதற்கான உத்தரவை சென்னையில் மாநகர காவல் ஆணையரும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் பிறப்பிக்கின்றனர்.

பல்வேறு குளறுபடிகள்: ஆனால் சமீப காலமாக குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், குண்டர் தடுப்பு சட்ட உத்தரவுகள் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகிறது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எளிதாக ஜாமீன் பெற்று விடுகின்றனர். மேலும் குண்டர் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றமும் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.

வழிகாட்டி நெறிமுறைகள்: இந்நிலையில், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘குண்டர் தடுப்புச் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்கும் முன்பாக தகுந்த வழிகாட்டி நெறிமுறைகளை மாவட்ட எஸ்பிக்கள் கடைபிடிக்க வேண்டும்.

பொதுவாக பொது ஒழுங்குக்கும், சட்டம் ஒழுங்குக்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துரைக்க வேண்டும். பொது ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் கடுமையான குற்றவழக்குகளில் மட்டுமே இந்த சட்டத்தை விதிவிலக்காக பயன்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். தவறாக பயன்படுத்தப்பட்டால் அது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தனிமனித சுதந்திரத்தை வெகுவாக பாதிக்கும்.

சாதாரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் போதுமான வழிமுறைகள் உள்ளன என்பதை போலீஸார் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக தமிழக டிஜிபி, மாவட்ட எஸ்பி-க்களுக்கு விரிவான சுற்றறிக்கை ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என அதில் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT