நாகர்கோவில்: குமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தை அடுத்த வேம்பனூர் குளத்தில் மீன் பிடிப்பதற்காக இளைஞர்கள் விரித்த வலையில் கட்டுக் கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. அவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவிலை அடுத்த வேம்பனூர் பாசனக்குளம் மற்றும் அதைசுற்றியுள்ள வயல்கள் உள்ளிட்ட ஈரநிலங்களுக்கு சமீபத்தில் ராம்சார் குறியீடு கிடைக்கப் பெற்றது. தற்போது குளம் வற்றியுள்ள நிலையில், குளத்தை தூர்வாரும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக குளத்திலிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதை பயன்படுத்தி வேம்பனூர் பகுதி இளைஞர்கள் சிலர் நேற்று மதியம் குளத்தில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மீனுக்காக அவர்கள் விரித்த வலையில் பிளாஸ்டிக் கவர் ஒன்று சிக்கியது. அதில் கட்டுக் கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அந்த கவரை கரைக்கு கொண்டு வந்து பிரித்து பார்த்தபோது ரூபாய் நோட்டு கட்டுகள் மீது தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் லேபிள் கட்டப்பட்டிருந்ததது.
முழுமையாக நனையாமல் பாதி அளவு நனைந்து சேதமடைந்த நிலையில் மொத்தம் 20 கட்டு 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் வேடிக்கை பார்க்க அங்கு திரண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இரணியல் போலீஸார் அங்கு வந்து ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வருவாய்த் துறையினர் அந்த ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்த போது சிலவற்றில் `சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா` என்ற வார்த்தை ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.
இதனால் அவை குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரம் அவற்றில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் லேபிள் இருப்பதால் குழப்பம் நிலவி வருகிறது.
ரூபாய் நோட்டுகளை முறைப்படி ஆய்வு செய்த பின்னரே இது தொடர்பாக உண்மை நிலை தெரியவரும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.