தமிழகம்

மவுலிவாக்கம் கட்டிடக் கலை நிபுணர் முன்ஜாமீன் கோரி மனு

செய்திப்பிரிவு

மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி கட்டிடக் கலை நிபுணர் (ஆர்க்கிடெக்ட்) உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக கட்டிடக் கலை நிபுணர் பி.சுகன்யா தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

நான் த்ரிஷ்திகோன் ஆர்க்கி டெக்சுரல் கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தில் கட்டிடக் கலை நிபுணராக பணியாற்றுகிறேன். மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் வடிவமைப்பை இந்த நிறுவனம் உருவாக்கியது. அவ்வாறு உருவாக்கிய குழுவில் நானும் ஒருவராக இருந்து அதனை உருவாக்கினேன்.

எனினும் கட்டிடத்தின் உயரம், அதன் வடிவம், அறைகளின் உயரம் போன்றவற்றை தீர்மானித்ததில் எனது பங்களிப்பு என்பது மிகவும் குறைவானது. கட்டிடத்தின் தளம் எவ்வளவு ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதையோ, கட்டிடம் கட்டத் தேவையான மண்ணின் தன்மை குறித்து தீர்மானிப்பதிலோ கட்டிடக் கலை நிபுணர்களின் பங்கு எதுவுமே இல்லை. மேலும் தூண்களின் தடிமன், இரும்பு கம்பிகளின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையோ, கான்கிரீட் கலவை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையோ கட்டிடக் கலை நிபுணர்கள் தீர்மானிப்பதில்லை. இவை எல்லாமே கட்டுமான பொறியாளரால்தான் தீர்மானிக்கப்படுகின்றன. கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் கட்டிடக் கலை நிபுணர்களுக்கு எந்தப் பணியும் இல்லை.

ஆகவே மவுலிவாக்கத்தில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் நான் எந்த குற்றமும் இழைக்கவில்லை. எனினும் என் மீது சென்னை மாங்காடு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸார் முன்னிலையில் ஆஜராகி புலன் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக உள்ளேன்.

ஆகவே, இந்த வழக்கில் என்னை கைது செய்யாமல் இருக்கும் வகையில் நீதிமன்றம் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சுகன்யா தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 7) ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT