மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சூறாவளிக் காற்றால் பல டன் மா சேதமடைந்துடன், விலையும் இல்லாததால் பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக பெண் விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
மானாமதுரை அருகே உள்ள மாங்குளத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ஹேமாதர்ஷினி. இவரது தோட்டத்தில் 3.5 ஏக்கரில் மா மரங்கள் உள்ளன. கல்லாமை, காசாலட்டு, ராஜபாளையம் சப்போட்டா, இமாம்பசந்த் உள்ளிட்ட ரகங்கள் உள்ளன. இங்கு விளையும் மாம்பழங்களை மானாமதுரை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.
மாம்பழ சீசன் ஏப்ரலில் தொடங்கி ஜூலை வரை இருக்கும். இந்தாண்டு நல்ல விளைச்சல் இருந்ததால் லாபம் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் ஹேமாதர்ஷினி. ஆனால் வரத்து அதிகரிப்பால், போதிய விலை கிடைக்கவில்லை. மேலும் கோடை மழையின்போது வீசிய சூறைக்காற்றால் 3 டன் வரை மாம்பழங்கள் கீழே விழுந்து சேதடைந்தன.
இதுகுறித்து ஹேமாதர்ஷினி கூறியதாவது: குடும்பத்தோடு விவசாயம் செய்கிறோம். ராஜபாளையம் சப்போட்டா ரகம் கிலோ ரூ.35, கல்லாமை ரூ.25, இமாம்பசந்த் ரூ.50-க்கும் விற்றோம். வரத்து அதிகரித்ததால் அதை விட குறைந்த விலைக்கு கேட்டனர். கடந்த காலங்களில் 20 டன்னுக்கே ரூ. 7 லட்சம் வரை லாபம் கிடைத்தது. ஆனால் இந்தாண்டு 40 டன் வரை விளைந்தும் ரூ.2.5 லட்சத்துக்கு கூட விற்க முடியவில்லை. மேலும் சூறைக்காற்றால் 3 டன் வரை சேதடைந்தது. இந்தாண்டு எங்களுக்கு பராமரிப்பு செலவுக்கு கூட பணம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.