திருப்பூர்: குளிர்பானத்துக்கு கூடுதலாக ரூ.5 வசூலித்த திருப்பூர் உணவகத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பெரியவீதியை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.அசோக்ராஜா (35). இவர் பழைய பேருந்து நிலையம் அருகே பல்லடம் சாலையில் உள்ள கொக்கரக்கோ உணவகத்தில் கடந்த ஆண்டு 27-ம் தேதி திருப்பூர் நீதிமன்றத்தில் பணிகளை முடித்துவிட்டு, அன்று மதியம் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள் கொக்கரக்கோ உணவகத்தில் மதிய உணவு சாப்பிட சென்றார்.
அப்போது உணவு சாப்பிட்டு விட்டு குளிர்பானம் வாங்கி அருந்தி உள்ளார். குளிர்பானத்தின் சில்லரை விற்பனை விலை ரூ.15. ஆனால் கடைக்காரர் ரூ.20 என தொகை குறிப்பிட்டு ரசீது கொடுத்துள்ளார். இது தொடர்பாக உணவகத்தில் அசோக்ராஜா முறையிட்டபோது உரிய பதிலளிக்கவில்லை. நுகர்வோரை அலட்சியப்படுத்தியதுடன், உணவகத்தின் ஊழியர் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அசோக்ராஜா மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மாவட்ட குறைதீர் ஆணையத்தின் தலைவர் எஸ்.தீபா, உறுப்பினர்கள் எஸ்.பாஸ்கர், வி.ராஜேந்திரன் ஆகியோர் விசாரித்தனர். வழக்கில் குளிர்பானத்துக்கு குறிப்பிட்ட விலையை காட்டிலும் ரூ.5 கூடுதலாக வசூலித்தது, மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுத் தொகைக்கு இழப்பீடாக உணவகத்தின் மேலாளர் ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். இந்த தொகையை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் உத்தரவு தேதியில் இருந்து 6 சதவீதம் வட்டியும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.