தமிழகம்

காங்கிரஸை மையமாக வைத்து கூட்டணி என்ற முதல்வர் ஸ்டாலின் கருத்து வலுப்படும்: கார்த்தி சிதம்பரம்

இ.ஜெகநாதன்

தேவகோட்டை: காங்கிரஸை மையமாக வைத்து கூட்டணி என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து வலுப்படும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.

அவர் தேவகோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''நாட்டில் அன்னிய செலாவாணி அதிகரிப்பது நல்ல விஷயம்தான். அமலாக்கத் துறையை எதிர்க்கட்சிகளை பயமுறுத்தவே பயன்படுத்துகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்துவதில்லை. அந்தத் துறையை சிபிஐ பொருளாதார புலனாய்வு பிரிவுடன் இணைத்துவிட வேண்டும்.

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடம் பெரிய அளவில் கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூரை பற்றி பேச பிரதமருக்கு விருப்பமில்லை. மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வருவதை வரவேற்கிறோம். கோயில்களில் தரிசித்துவிட்டு, செட்டிநாடு உணவுகளை சாப்பிட்டு செல்லட்டும்.

பாஜக எதிர்ப்பாக எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் சேர தான் ஒன்று கூடினர். காங்கிரஸ் மையமாக வைத்துதான் கூட்டணி அமைக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கூறினார். தற்போது அந்தக் கருத்து வலுப்படும்.

இந்திய பிரதமர்கள் பலர் அமெரிக்க சென்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதனால் மோடிக்கு வரவேற்பு கொடுத்தது பெரிய விசித்திரம் இல்லை. காங்கிரஸுடன் சில கட்சிகள் எளிதாக கூட்டணி வைத்து கொள்ள முடியும். சில மாநிலங்களில் நெருடல் இருக்கும். அதையும் தாண்டி கூட்டணி அமைக்க முடியும். தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களையும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT