குன்னூர்: குன்னூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள கவுன்சிலர்களின் குழு அமைக்கப்பட்டதால், ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுக்க முன்வராமல் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும், கடந்த சில ஆண்டுகளாகவளர்ச்சிபணிகள் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது பல்வேறுபணிகள் நடைபெறாமல் கிடப்பில்போடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஒரு சில வார்டுகளில் மட்டும் நகராட்சி சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதாகவும், மீதமுள்ள வார்டுகளில் பணிகள் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதன்படி, மாணிக்கம் பிள்ளை தோட்டம், 6-வது வார்டில் மேல் வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபாதை கழிவுநீர்கால்வாய், குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக்கூறி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக, நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய், கழிப்பிடம், தடுப்புச் சுவர், நடை பாதை உட்பட பல்வேறுபணிகள் செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. ஆனால், திமுகமாவட்ட செயலாளரின் மகனும், துணைத் தலைவருமான வாசிம்ராஜா தலைமையில் கவுன்சிலர்கள் அடங்கிய 5 பேர் குழுவின் இடையூறால், ஒப்பந்தப்புள்ளி கோரஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை என புகார் எழுந்து வருகிறது.
இது குறித்து நகராட்சி ஒப்பந்ததாரர்கள் கூறும்போது, "புதிதாக நகராட்சி சார்பில் கவுன்சிலர்கள் அடங்கிய ஐவர் குழு என்ற குழு அமைக்கப்பட்டது. டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு, இக்குழுவினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இது சட்டத்துக்கு புறம்பாக உள்ளதால், குன்னூர் நகராட்சியில் உள்ள ஒப்பந்ததாரர்கள், பணிகளை எடுக்காமல் உள்ளனர். இதனால், தற்போது அனைத்து பணிகளும் மேற்கொள்ள முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன" என்றனர்.